Sports
"இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !
17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். 13.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆடியது.
கிராவ்லி 86 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், டக்கட் 105 பந்துகளில் சதமடித்தார். இந்த ஜோடி 35 ஓவர்களில் 233 ரன்கள் குவித்த நிலையில், கிராவ்லி 122 ரன்களிலும், டக்கட் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த போப்பும் அதிரடியை தொடர்ந்த நிலையில், இடையில் ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதனைத் தொடர்ந்து போப்புடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்த ஹாரி புரூக் 80 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதிலும் ஷகீல் வீசிய 68-வது ஓவரில் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து அதகளப்படுத்தினார். போப் 90 பந்துகளில் சதமடித்த நிலையில், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னரும் இங்கிலாந்து அணி அதிரடியைத் தொடர்ந்த நிலையில் புரூக் 154 ரன்களுக்கும், ஸ்டோக்ஸ் 41 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் வில் ஜாகே 30 ரன்களும், ராபின்சன் 37 ரன்களும் குவிக்க இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது. அதிலும் ஒரே நாளில் ஒரே நாளில் 500 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. அதேபோல ஒரே நாளில் ஒரு அணியின் 4 வீரர்களும் சதமடித்ததும் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 499 ரன்கள் குவித்து ஆடிவருகிறது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தார் ரோடு போல இருக்கும் இந்த ஆடுகளத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படி பிட்ச் அமைத்தால் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாகிஸ்தான் அணியை கேலி செய்யும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " இத்தகைய பிட்ச் அமைத்ததால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாகிஸ்தான் அணியை கிண்டலும்,கேலியும் செய்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளின் மீது அனைவரின் கவனமும் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் வீணடித்துள்ளது.
இந்தியாவில் போட்டி நடைபெற்றால் இந்திய அணி சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும். அதுகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி அதை கூட செய்யவில்லை. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் பல பல சாதனைகள் படைக்க உதவுமே தவிர வேற எதற்கும் இது உதவாது. ரசிகர்களுக்கு இந்த போட்டி சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும்" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!