Sports
FIFA உலகக்கோப்பை.. Messi,Ronaldo படைத்த சாதனை.. வரலாற்றை மாற்றிய France.. சாதிக்ககாத்திருக்கும் Mbappe!
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களுக்கு நாள்தோறும் விருந்து படைத்து வருகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் கத்தாரில் சங்கமித்துள்ள நிலையில், நாள்தோறும் கோல் கொண்டாட்டத்தை ரசித்து வருகின்றனர்.
தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் வீழ்ந்த மெஸ்ஸியின் அர்ஜெண்டின அணி, மெக்சிகோவுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்று வாய்ப்புக்கான போட்டியில் நீடிக்கிறது.
2 போட்டிகளிலும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்க, அவரது தரிசனத்தை காண காத்திருந்த ரசிகர்களுக்கு பேரானந்தம் கிடைத்தது. மெக்சிகோவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் சக நாட்டைச் சேர்ந்த ஆல் டைம் ஜாம்பவானான மரடோனாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
5 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 8 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம், உலகக்கோப்பை தொடரில் மரடோனா சாதனையை சமன் செய்ததோடு, அர்ஜெண்டினாவுக்காக உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த 2வது வீரராகவும் உருவெடுத்தார்.
1966 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு குறைந்த மற்றும் அதிக வயதில் கோல் அடித்த வீரர் மற்றும் கோல் அடிக்க உதவிய ஒரே வீரர் மெஸ்ஸி தான்.
தொடர்ந்து 5 உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையுடன் ரொனால்டோ வலம் வரும் நிலையில், தான் சற்றும் சளைத்தவன் அல்ல என்பதை மெஸ்ஸி நிரூபித்திருக்கிறார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அனைத்து வகையான போட்டிகளையும் சேர்த்து 13 கோல்கள் பதிவு செய்துள்ளார். இதுவே, ஒரு ஆண்டில் மெஸ்ஸி அடித்த அதிகபட்ச கோல்களாகும்.
தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மெஸ்ஸிக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கனவு. 26 ஆண்டுகால அர்ஜெண்டினாவின் கோப்பை ஏக்கத்திற்கு மெஸ்ஸியின் மாயாஜால கால்கள் விடைகொடுக்கும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை.
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது பிரான்ஸ். நடப்பு சாம்பியன் என்ற உத்வேகத்துடன் அந்த அணி புதிய சாதனையோடும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது 16 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, 2010, 2014, 2018ஆம் ஆண்டுகளில் நடப்பு சாம்பியனாக இருந்த அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறியது. பிரான்சின் இந்த சாதனைக்கு முக்கிய காரணம் அணியில் இளம் துடிப்புடன் வலம் வரும் எமாப்பே.
உலக கால்பந்து அரங்கில் மதிப்புமிக்க வீரராக வலம் வரும் Mbappe டென்மார்க்-க்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்து பிரான்ஸ் அணி நாக் அவுட்க்கு முன்னேற ஆணிவேராக இருந்துள்ளார்.
டென்மார்க் அணிக்கு எதிராக 2வது கோலை பதிவு செய்த அவர், உலகக்கோப்பை தொடரில் தனது 7வது கோலை பதிவு செய்துள்ளார். அத்துடன், குறைந்த வயதில் (24வயதிற்கு முன்பாக) 7கோல்கள் அடித்த ஆல் டைம் ஜாம்பவான் பிரேசிலின் பீலே-வின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2018 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் கோல் அடித்து, கோப்பையுடன் வலம் வந்த Mbappe, பீலேவிற்கு பிறகு குறைந்த வயதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
சமகால நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் தங்களது ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 8 கோல்கள் அடித்துள்ள நிலையில், இளம் வீரர் Mbappe 7கோல்கள் பதிவு செய்துள்ளது கால்பந்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அடுத்தடுத்த போட்டிகள் பிரான்ஸ் அணிக்கு காத்திருக்கும் நிலையில், Mbappe வரலாற்றை திருத்தி எழுத காத்திருக்கிறார்.
- மீனா.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!