Sports

360 டிகிரி சூர்யகுமாரே உங்களிடம் கத்துக்கணும்.. தமிழக வீரரை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் !

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 19-வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்றுவந்த அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை நிரூபித்து வந்துள்ளார்.

அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூரோடு இணைந்து இக்கட்டான தருணத்தில் அவர் அடித்த அரைசதம் அந்த தொடரையே இந்திய அணியின் பக்கமாக திரும்பியது. அதன் பின்னர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவர் அடித்த 85 ரன்களும் தொடர்ந்து அகமதாபாத்தில் அவர் அடித்த 96 ரன்களும் அவரை அணியில் அசைக்க முடியாத வீரராக மாற்றியது.

ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. அணியில் அவர் இடம்பெறுவதும் பின்னர் காயம் காரணமாக வெளியேறுவதுமாகவே அவரின் கடந்த 2 ஆண்டு கிரிக்கெட் பயணம் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்த அவர், 300 ரன்களை கடக்காது என எதிர்பார்க்கப்பட்ட , இந்திய அணி 306 ரன்களை குவிக்க உதவினார். அதிலும் மேட் ஹென்றி பந்துவீச்சில் 360 டிகிரி ஸ்டைலில் அவர் ஆடிய ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதில் பலர் 360 டிகிரி வீரர் சூரியகுமாரே இந்த வகையில் சிறந்த ஷாட்டை ஆடமாட்டார் என்று கூறி வருகின்றனர்.

Also Read: பாக். இல்லாவிட்டால் உலகக்கோப்பை தொடரை யார் பார்ப்பார்கள்.. BCCI-க்கு பாகிஸ்தான் வாரியம் எச்சரிக்கை !