Sports

கத்தார் உலகக்கோப்பையில் எழுச்சிபெறும் ஆசிய நாடுகள்.. வருங்கால வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா ?

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கால்பந்து என்பதே கணிக்க முடியாத விளையாட்டு என்பதை போல இந்த தொடரிலும் பல கணிக்க முடியாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியை நடத்தும் நாடான கத்தார் 0-2 என்ற கணக்கில் ஈகுவடார் அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதேபோல குரூப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான நெதர்லாந்து ஆப்ரிக்க சாம்பியன் செனக்கல் அணிகள் இடையிலான மோதலில் 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

கால்பந்தின் தாயகமாக கருதப்படும் இங்கிலாந்து ஆசிய அணியான இரானை 6-2 என்ற கணக்கில் பந்தாடியது. பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்த, ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் கோஸ்ராரிக்கா அணியை நசுக்கியது. அதேநேரம் முந்தைய கால்பந்தில் எப்போதாவது நிகழும் அதிசயமான பெரிய அணிகளை சிறிய அணிகள் வீழ்த்துவது இந்த முறை முதல் வாரத்திலேயே நடந்துள்ளது.

கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள சவூதி அரேபிய அணிக்கு எதிரான 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்கு 3 முறை உலகக்கோப்பையை வென்ற அணியான ஜெர்மனி மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் 1-2 என தோல்வியடைந்துள்ளது.

பெரும்பாலும் ஆப்ரிக்க அணிகள் தான் இதுபோல ஐரோப்பிய தென்னமெரிக்க அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். ஆனால் இந்த முறை ஆசிய அணிகளின் இந்த திடீர் எழுச்சி இந்த கால்பந்து தொடரை சுவாரசியமாக்கியுள்ளது.

அர்ஜென்டினா, ஜெர்மனி போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக ஆசிய நாடுகளின் இந்த வெற்றி நிச்சயம் ஆசிய நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் அடுத்தடுத்த உலககோப்பைகளில் ஆசிய அணிகளின் பங்கேற்பை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் FIFA-க்கு ஏற்படுத்தும். ஒன்று வரும்காலங்களில் FIFA ஆசிய நாடுகளுக்கான SLOT-களை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். அல்லது உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியிருக்கும்.

ISL போன்ற கால்பந்து தொடர்களின் எழுச்சியால் இந்திய கால்பந்து தற்போது மறுசீரமைப்பு அடைந்துவரும் நிலையில், இது போன்ற வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்தினால் நிச்சயம் உலககோப்பை போன்ற தொடர்களில் இந்தியாவின் பங்கேற்பதை நாமும் பார்க்கலாம்.

Also Read: ஒரு புறம் வெற்றி.. மற்றொருபுறம் உலகையே ஆச்சரியப்பட வைத்த ஜப்பான்: கத்தாரில் இருந்து வைரலாகும் video!