Sports

49 பந்துகளில் அதிரடி சதம்.. T20 போட்டிகளில் சூரியகுமார் படைத்த அரிய சாதனை.. பாராட்டித்தள்ளும் ரசிகர்கள் !

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி அந்த தொடரில் அதிகம் ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது.

முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அதில் இந்தியா சார்பில் அபாரமான ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சூர்யகுமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை சூர்யகுமார் பதிவு செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் இரண்டு சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்க்கு முன்னர் 2018ம் ஆண்டு ரோஹித் சர்மா ஒரே வருடத்தில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: #FIFA2022 :"முதல் போட்டியில் தோற்கவேண்டும்" -எதிரணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததா கத்தார் ?