Sports

"இவருக்கு இந்திய அணியின் நடுவரிசையில் இடமில்லை"-ரிஷப் பந்த் குறித்து வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.

உலகக்கோப்பையில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், மூத்த வீரர்களுக்கு இனி வாய்ப்புகள் வழங்கப்படாது என கூறப்பட்டது. அதற்கு ஏற்ப நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த தொடரில் அவர் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் தனது போட்டியாளரான ரிஷப் பந்த் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "ரிஷப் பண்ட், டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார். ஒருநாள் அணிலும் ரிஷப் பண்ட்க்கு அணியில் இடம் இருக்கிறது .ஆனால் டி20 அணியில் பொறுத்தவரை ரிஷப் பண்ட், டெல்லி அணிக்காக ஒரு இடத்திலும் , இந்திய அணிக்காக வேறு இடத்திலும் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

டி20-யில் விராட் கோலி ,சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என மூன்று வீரர்களும் நடுவரிசையில் சிறப்பாக ஆடிவருவதால் அவர் அங்கு களம் இறங்க முடியாது. இதனால் நடுவரிசையில் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. அதேநேரம் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடக்கூடியவர். அதனால் அவரை துவக்க வீரராக அணி நிர்வாகம் களமிறக்கலாம். பவர் பிளேவில் வீரர்கள் உள் வட்டத்திற்குள் நிற்கும்போது அவருக்கு ரன் சேர்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி.. இந்திய அணியின் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்து BCCI அதிரடி !