Sports

மீண்டும் இந்திய அணியில் களமிறங்கும் M.S.தோனி ? - இந்திய அணியின் தொடர் தோல்விகளால் BCCI முடிவு !

கடந்த 2007-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணி குரூப் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்க விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் களமிறங்கியது. இந்த அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி அறிவிக்கப்பட்டார். எப்படியும் மோசமாக தோல்வியை சந்தித்து இந்திய அணி வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோப்பையை வென்று இந்திய அணி பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

அதன்பின்னர்தான் தோனியின் காலம் தொடங்கியது. 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று அசத்தினார். ஆனால், அதன்பின்னர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி,ஐசிசி தொடர்களில் தோல்வி என சரிவை சந்தித்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி அவராகவே ஓய்வு பெற்றார்.

பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கேப்டனாக இருந்து அவர் பெற்றுக்கொடுத்த 3 விதமான ஐசிசி கோப்பைகளை தவிர வேறு எந்த ஐசிசி கோப்பைகளையும் அவருக்கு பின்னர் இந்திய அணி வெல்லவில்லை. இதனால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வெளியேறும் போதெல்லாம் தோனியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிஸ் செய்வார்கள்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், தோனியை இந்திய அணியில் மீண்டும் இடம்பெறச்செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அணியில் ஆலோசகர் பதவி அல்லது முக்கிய வேறு பதவி ஏதும் தோனிக்கு கொடுக்கபடலாம் என கூறப்படுகிறது.

அதேநேரம் தோனியை 20 ஓவர் போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து தோனியிடம் பேசப்பட்டதா? அவரின் முடிவு என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Also Read: "அணியில் இவர்கள் எதுக்கு? வீரர்களை குழப்பவா?" -இந்திய அணி நிர்வாகத்தை சாடிய முன்னாள் இந்திய ஜாம்பவான்!