Sports

"எங்களுக்கும் உங்களுக்கு உள்ள வித்தியாசம் இதுதான்" - பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் !

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்,பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்தது.அதன்பின்னும் அபாரமாக ஆடிய இந்த ஜோடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்து இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அரையிறுதியில் அதேபோன்ற ஒன்று சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை விமர்சித்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதனைக் குறிப்பிட்டு இந்திய அணியை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில்," இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0" என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்திய அணியை முன்னர் 152-0 என வீழ்த்திய பாகிஸ்தான் அணியும், 170-0 என வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதாக கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதானும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், "எங்களுக்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் வெற்றிபெறும்போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நீங்கள் மற்றவர்கள் தோற்கும் போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதனால்தான் உங்கள் சொந்த தேசத்தின் நலனில் கவனம் செலுத்த முடிவதில்லை" எனக் கூறியுள்ளார்

Also Read: நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு விமானங்கள்: வெடித்து சிதறியதால் 6 பேர் பலி? சோகத்தில் முடிந்த சாகசம் |VIDEO