Sports

களத்தில் நிகழ்ந்த ஒற்றை தவறு.. காயத்தால் இங்கிலாந்திடம் கோப்பையை இழந்த பாகிஸ்தான்!சாம்பியனான இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். 15 ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொஹம்மது ஹாரிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் -மசூத் ஜோடி சிறப்பான ஆடி பாகிஸ்தான் அணியை நல்ல நிலைக்கு சென்றது. ஆனால் பாபர் அசாம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தான் சரிவு நடந்தது. பாபர் அசாம் ஆட்டமிழக்கும்முன் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையே இழந்து இருந்தது. ஆனால் பாபர் அசாம் ஆட்டமிழந்த பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களையே குவித்தது.

138 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரில் ஆட்டமிழந்த நிலையில்,அடுத்து வந்த சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் பட்லர்- ஸ்டோக்ஸ் இணை அணியின் ரன்களை உயர்த்திய நிலையில், பட்லர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட் பயத்தில் மெதுவாக ஆடத்தொடங்கினர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை பரபரப்பாக்கினர். ப்ரூக்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது.

இறுதி 5 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய நட்சத்திர பந்துவீச்சாளர் அப்ரிடி முதல் பந்து வீசிய நிலையில் காயமடைந்தார். அப்போது பாகிஸ்தானிடம் 6-வது பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் பேட்ஸ்மேனான இப்திகார் அஹமத் பந்துவீச வந்த நிலையில், அவரின் 5 பந்தில் 12 ரன்கள் விலாச ஆட்டம் அப்படியே இங்கிலாந்து பக்கம் திரும்பியது.

இதைத் தொடர்ந்து இறுதிவரை களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வசப்படுத்தியது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வசப்படுத்தினார். மேலும், தொடரில் 13 விக்கெட்டுக்குகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் சொந்தமாக்கினார்.

Also Read: "எங்களுக்கும் உங்களுக்கு உள்ள வித்தியாசம் இதுதான்" - பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர் !