Sports

பந்தையே தொடாமல் நாயகனான அஸ்வின்.. ஒற்றை பந்து நிகழ்த்திய மாயம்.. கோலிக்கு இணையாக கொண்டாடும் ரசிகர்கள் !

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி ஜோடி, விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ஆடியது. இந்திய வெற்றிக்கு இறுதியில் 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாஹீன் அப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

பின்னர் 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் ரவுப் அந்த ஒவரில் 15 ரன்கள் விலாசப்பட்டது. இறுதி ஓவரை முஹம்மது நவாஸ் வீச முதல் பந்திலேயே பாண்டியா ஆட்டம் இழந்தார். 5 பந்துக்கு 16 ரன்கள் தேவை பட அடுத்து வந்த கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் கோலி 2 ரன்கள் ஓடி, தொடர்ந்த வந்த இறுதி ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். இடுப்பு உயரத்துக்கு வந்த அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி.

இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட தேவையில்லாமல் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இதனால் களத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசிய நவாஸ் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பந்தை போலவே லெக் ஸ்டெம்புக்கு வெளியே வீசினார். சாதாரணமாக இந்த இக்கட்டான பரபரப்பான நேரத்தில் யாராக இருந்தாலும் அந்த பந்தை தினேஷ் கார்த்திக்கை போலவே அடிக்கவே முயன்றிருப்பார்கள்.

ஆனால் அங்கு இருந்தது அஸ்வின். அத்தனை பரபரப்பான சூழ்நிலையில் கூட கல்லி கிரிக்கெட்டில் விளையாடுவதைபோல ஒதுங்கி வந்தார். பந்து வைட் ஆனது. இந்தியாவுக்கு ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தை அஸ்வின் அழகாக மிட் ஆஃப் திசையில் தூக்கிவிட்டு, வெற்றிக்கு தேவையான அந்த ஒரு ரன்னை எடுக்க இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியை வெல்ல முக்கிய காரணமாக விராட் கோலி திகழ்ந்தாலும் இக்கட்டான நேரத்தில் சமயோஜிதமாக யோசித்து அணியை வெல்ல வைத்த அஸ்வினை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர். பலரும் கிரிக்கெட்டில் ஒரு செஸ் பிளேயரா என்றும், அந்த நேரத்தில் இப்படி எல்லாம் யோசிக்க அஸ்வினால் மட்டுமே முடியும் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

Also Read: “கணவரும், வளர்ப்பு மகனும்.. என்னை கருணைக்கொலை செய்யுங்கள்” : குடியரசுத் தலைவருக்கு பெண் உருக்கமான கடிதம்!