Sports

"உலகின் சிறந்த காரை கேரேஜில் யாரும் சும்மா நிறுத்தி வைப்பார்களா ?" - இந்திய அணியை விமர்சித்த பிரெட் லீ !

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடமாட்டார் என்று அறிவித்தது பிசிசிஐ. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்பது கடந்த சில நாள்களாகவே பெரிய பேசுபொருளாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவர் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் பும்ரா.கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி பௌலராக அவர் தான் இருக்கிறார். அவர் இல்லாமல் ஆடினால் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடும்.

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் தான் களமிறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.காயம் காரணமாக விலகிய பும்ராவுக்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அவர் இடத்துக்கு பெரும்பாலும் முகமது சமி தேர்வுசெய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பும்ராவுக்கு மாற்றாக உலகக்கோப்பையில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உங்கள் வசம் உலகின் சிறந்த கார் உள்ளது. ஆனால், நீங்கள் அதை கேரேஜில் சும்மா நிறுத்தி வைத்துள்ளீர்கள். அப்படி செய்தல் அதனை வைத்திருப்பதில் என்ன பயன்?

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இளம் வீரர். சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரது பவுலிங் வேற லெவலில் இருக்கும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலருக்கும், அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு” என அவர் கூறியுள்ளார்.

Also Read: ஆண்கள் விடுதி மாணவர்களின் செயலால் கொதித்தெழுந்த அமைச்சர்கள்..காட்டமாக அறிக்கை விட்ட பிரதமர்..நடந்தது என்ன