Sports

"T20 உலகக்கோப்பையின் நாயகன் இந்த வீரர்தான்" - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய டேல் ஸ்டெயின் !

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். கடந்த ஒரு வருடத்தில் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக அவரே விளங்கி வருகிறார். ஒரு ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சமீபத்தில் உடைத்திருக்கிறார் சூர்யா.

இந்த ஆண்டு 21 போட்டிகளில் அவர் 732 ரன்கள் குவித்திருக்கிறார். ஸ்டிரைக் ரேட் 180.29! இத்தனைக்கும் இந்த ஆண்டில் இன்னும் 3 மாதங்கள் மீதமிருக்கின்றன. ஒரு உலகக் கோப்பை வேறு வரவிருக்கிறது. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு 17 போட்டிகளில் ஷிகர் தவான் 689 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 147) எடுத்திருந்ததே இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. 2016ம் ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் ஆடிய விராட் கோலி 641 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவருடைய ஸ்டிரைக் ரேட் 140 ஆகத்தான் இருந்திருந்தது.

கடைசியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் 33 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் சூர்யா. இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்களும், 5 ஃபோர்களும் விளாசினார். இந்த போட்டியில் அனைத்து வீரர்களும் திணறிய நிலையில் தனியொருவனாக அனாயசமாக செயல்பட்டார் சூரியகுமார் யாதவ். அதேபோல தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் தான் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நாயகன் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "சூர்யகுமார் யாதவ் ஒரு 360 டிகிரி வீரராக எனக்கு ஏபி டிவிலியர்ஸை நினைவு படுத்துகிறார். தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் உலக கோப்பையில் அசத்தப் போகும் வீரர்களில் நிச்சயம் அவரும் ஒருவராக இருப்பார். நிச்சயம் அவர்தான் இந்திய அணியின் நாயகன்.

பந்தின் வேகத்தை சாதகமாக பயன்படுத்தி அடிக்கும் பேட்ஸ்மேன்களில் சூர்யகுமாரும் ஒருவர். குறிப்பாக ஸ்கொயர் திசைக்கு கீழே அடிப்பதற்கு அவர் மிகவும் பிடித்துள்ளது. பெர்த், மெல்போர்ன் போன்ற ஆஸ்திரேலிய களங்களில் அதிகப்படியான வேகம் இருக்கும். அந்த வேகத்தைப் பயன்படுத்தி அவர் பைன் லெக், பிஹைன்ட் உட்பட அனைத்து திசைகளிலும் அதிரடியாக அடிப்பார்" என்று கூறியுள்ளார்.

Also Read: உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!