Sports

”பும்ராவின் காயத்துக்கு காரணமே ரோகித், டிராவிட்தான்” - முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் தாக்கு !

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடமாட்டார் என்று அறிவித்தது பிசிசிஐ. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பங்கேற்பது கடந்த சில நாள்களாகவே பெரிய பேசுபொருளாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவர் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் பும்ரா.கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி பௌலராக அவர் தான் இருக்கிறார். அவர் இல்லாமல் ஆடினால் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் தான் களமிறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

இந்த நிலையில் பும்ரா இல்லாமல் ஆடுவது இந்திய அணியை கடுமையாக பாதிக்கும் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிர்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”பும்ரா சமீபத்தில் தான் காயத்திலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார். மீண்டும் அவர் காயம் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதைப் புரிந்து கொண்டு முதல் போட்டியில் விளையாட வைக்கவில்லை. ஆனால் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது என்பதற்காக, இரண்டாவது போட்டியில் அவரை உடனடியாக களம் இறக்கினார்கள். உடல்நிலையை கருத்தில்கொள்ளவில்லை.

அந்த இடத்தில்தான் தவறு நேர்ந்திருக்கிறது. மூன்றாவது போட்டியிலும் அவரை விளையாட வைத்ததால் குணமடைந்து வந்த அவரது காயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பும்ரா விஷயத்தை அலட்சியமாக கையாண்டதுதான் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம்.

டி20 உலக கோப்பையில் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் சற்று பதட்டம் இன்றி விளையாடுவார்கள். அவர்களது பேட்டிங் அணுகுமுறையும் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கும். இந்திய அணி காயம் தொடர்பான விசயங்களில் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

Also Read: ரயில்வே வழங்கிய சமோசாவில் குட்கா தாள்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட IRCTC.. இணையவாசிகள் கண்டனம் !