Sports

"உலகக்கோப்பையில் இந்த வீரர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடி" -முன்னாள் இந்திய வீரர் கருத்து !

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான தொடரில் இந்திய அணி 2-1 என கைப்பற்றினாலும், முதல் போட்டியில் 200 ரன்களை அடித்தும் ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது இந்திய அணியின் பந்து வீச்சைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் பும்ரா விளையாடவில்லை.

பயிற்சியின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் 6 மாதங்கள் வரை விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாக உள்ளது.அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகல் அவர் அணியில் இடம் பெறுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பும்ரா இல்லாத நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பும்ரா ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. முதல் பவர்-ப்ளே ஓவர்களில் டெத் ஓவர்களில் அவர் இல்லாததை சரிசெய்வது கடினமான ஒன்று. பும்ரா இல்லாததை சரி செய்ய மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பவர்-ப்ளேவில் சிறப்பாக பந்துவீச இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். முந்தைய போட்டிகளில் பார்த்தது போல டெத் ஓவர்களில் பந்துவீச அர்ஷ்தீப் சிங் இருக்கிறார். அவர் அந்த பொறுப்பை எடுத்து இன்னும் முன்னேற வேண்டும். முகமது ஷமியைப் போன்ற ஒரு வீரரும் இந்தியாவிடம் இருக்கிறார். இந்திய அணியின் தேர்வாக புவனேஷ் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஸ்தீப்சிங் இருப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Also Read: 'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர் கருத்து !