Sports
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா?.. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் ஓபன் டாக்!
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருக்கிறது. 2022 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியிலும் தோல்வியைச் சந்தித்தது. டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் இரண்டே மாதங்களில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணியின் செயல்பாடு கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்திய அணியின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதால், ரோஹித் ஷர்மாவின் குழுவுக்கு பல விமர்சகர்களும் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றனர்.
பல இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாட்டை விமர்சித்திருக்கும் நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸ் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வாய்ப்பைப் பற்றிக் கூறியிருக்கிறார் அவர். இந்திய அணி சமீபத்தில் தடுமாறினாலும், நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று கூறியிருக்கிறார் காலிஸ்.
"சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக இந்தியா இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் உலகக் கோப்பை என்று வரும்போது அதற்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும். உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான அணியை இந்தியா கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் காலிஸ்.
"அவர்கள் நிச்சயமாக நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். உலகக் கோப்பையில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் முக்கியமான பெரிய தருணங்களில் நீங்கள் மிகச் சிறப்பாக செய்யவேண்டும். இந்திய அணிக்கு அது இரண்டுமே கைகூடும் என்று நினைக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார் காலிஸ்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்பின்னர்களின் பங்களிப்பு பற்றிப் பேசிய காலிஸ், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தருணம் வரும் என்றும், ஸ்பின்னர்களும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்திய அணியின் உலகக் கோப்பை ஸ்குவாடில் யுஸ்வேந்திர சஹால், ஆர் அஷ்வின், அக்ஷர் படேல் என்று மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். "ஒவ்வொரு அணிக்குமே சுழற்பந்துவீச்சாளர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தும் தருணங்கள் வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட காலிஸ், தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் இந்தியா கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுமார் 500 சர்வதேச போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய அவர், 25,000 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். மிதவேகப் பந்துவீச்சாளரான அவர், சர்வதேச அரங்கில் 550 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?