Sports
“பெண்களுக்கான ஐ.பி.எல்.. சொந்த மண்ணில் போட்டிகள்” : கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கங்குலி!
இந்தியன் பிரீமியர் லீக், ரஞ்சிக் கோப்பை போன்ற அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் அடுத்த சீசன் ஹோம் - அவே பாணியில் நடக்கும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார்.
கொரோனா காரணமாக கடந்த 3 சீசன்களாக ஐ.பி.எல் தொடர் வெளிநாடுகளிலோ அல்லது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மைதானங்களிலோ மட்டும் தான் நடந்தது. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மீண்டும் முன்பைப் போல் அனைத்துத் தொடர்களையும் நடத்துவதில் பி.சி.சி.ஐ மும்முரமாக இருக்கிறது.
"அடுத்த ஆண்கள் ஐ.பி.எல் தொடரை பழையபடி ஹோம் - அவே ஃபார்மட்டில் நடத்துவது என்று திட்டமிட்டிருக்கிறோம். 10 அணிகளும் தங்களுடைய ஹோம் கேம்களை அவர்களுக்கான மைதானங்களிலேயே விளையாடலாம்" என்று கங்குலி தன்னுடைய கடிதத்தில் எழுதியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"நாம் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவருமே அறிந்ததது போல் இனி அனைத்து வயதினருக்குமான நம் அனைத்து விதமான உள்ளூர் தொடர்களையும் நாடு முழுவதும் வழக்கம் போல் முழுமையாக நடத்தப்போகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து உறுப்பினர்களும் பி.சி.சி.ஐ அமைப்புக்குக் கொடுத்த ஆதரவு அப்பாற்பட்டது. இந்த பெருந்தொற்று ஓரளவு ஓய்ந்து விட்டது என்று நான் நம்புகிறேன். இனி எதிர்காலத்தில் நாம் நிறைய கிரிக்கெட்டை பார்க்கப்போகிறோம்" என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கங்குலி.
இந்தியாவின் பிரதான முதல் தர தொடரான ரஞ்சி டிராபி தொடர் வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஹோம் - அவே ஃபார்மட்டில் நடக்கும். தன்னுடைய கடித்ததில் இரண்டு இராணி கோப்பை தொடர்கள் நடக்கும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் கங்குலி. "2019-20 ரஞ்சி சீசனின் சாம்பியனான சௌராஷ்டிரா அணி ராஜ்கோடில் அக்டோபர் 1 முதல் 5 வரை நடக்கும் இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை சந்திக்கும்.
பெங்களூருவில் நடந்த 2021-22 ரஞ்சி சீசன் இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மத்திய பிரதேச அணி. அந்த அணி மார்ச் 1-5 வரை இந்தோரில் நடக்கும் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியை சந்திக்கும்" என்று எழுதியிருக்கிறார் கங்குலி.
அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கும் என்பதையும் கூறியிருக்கிறார் கங்குலி. "அனைவரும் பெரிதாக எதிர்பார்த்து வரும் பெண்கள் ஐ.பி.எல் தொடரில் பி.சி.சி.ஐ கவனம் செலுத்தி வருகிறது. முதல் சீசனை அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதுபற்றிய அறிவுப்புகள் விரைவில் வெளிவரும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வைட் பால் தொடர்கள் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
"15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் போட்டிகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். நம் தேசிய அணி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்க, கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் கிரிக்கெட் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்த புதிய தொடர் பல இளம் சிறுமிகள் தேசிய அணியில் நுழைவதற்கு ஒரு பாதையாக அமையும்" என்றும் எழுதியிருக்கிறார் கங்குலி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!