Sports
"நான் இந்திய அணியைத் தேர்வு செய்தால், அதில் நிச்சயம் இவர் இருப்பார்"-இளம்வீரரை குறிப்பிட்ட முன்னாள் வீரர்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இல்லாமல் தான் களமிறங்கியது இந்திய அணி. கடந்த சில மாதங்களாகவே பிளேயிங் லெவனில் அவருடைய இடம் பற்றி பல விவாதங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் கேப்டன் ரோஹித் ஷர்மா தினேஷ் கார்த்திக்கையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆனால் அந்த முடிவு முதல் போட்டியில் நல்ல முடிவுகளைக் கொடுக்கவில்லை. 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசி நான்கு இன்னிங்ஸ்களாக சுமாராகவே ஆடி வரும் தினேஷ் கார்த்திக் 7, 6, 12, 1* என்ற ஸ்கோர்களையே எடுத்திருக்கிறார்.
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணி இருவரையும் மாறி மாறி பயன்படுத்தியது. அதனால், இருவருக்குமே போதுமான போட்டிகள் கிடைக்கவில்லை. அவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அணி தினேஷ் கார்த்திக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே தெரிகிறது.
இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஓப்பனரான மாத்யூ ஹெய்டன் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தாலும், எந்த சூழ்நிலையிலும் தான் ரிஷப் பண்ட்டை இந்தியாவின் அனைத்து ஃபார்மட்களிலும் பிளேயிங் லெவனில் விளையாடவைப்பார் என்று கூறியிருக்கிறார் அவர்.
"நான் இந்திய அணியைத் தேர்வு செய்தால், ஒவ்வொரு ஸ்குவாடிலும் ரிஷப் பண்ட் இடம் பெறுவார். அவர் தான் இந்திய அணியின் எதிர்காலம். அவருக்கு போதுமான அவகாசமும் ஆதரவும் கொடுக்கவேண்டும். அவர் இந்திய அணியில் இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து" என்று இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக தொலைக்காட்சி உரையாடலின்போது கூறினார் ஹெய்டன்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் பற்றிப் பேசிய ஹெய்டன் ஜாஷ் இங்ளிஸ் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். அவரை டேவிட் வார்னரோடு ஒப்பிட்ட ஹெய்டன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாத தருணத்தில் இங்ளிஸ் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.
"ஆஸ்திரேலிய அணி பல முன்னணி வீரர்கள் இல்லாமல் தடுமாறுகிறது. அதனால் அவர்கள் பல முயற்சிகள் செய்து பார்க்கவேண்டும். அடுத்து யார் என்பதைப் பார்க்க வேண்டும். இளம் வீரரான இங்ளிஸ் பல்வேறு திறமைகள் கொண்டவர். அவர் கிட்டத்தட்ட வார்னரைப் போலத்தான். என்ன, ஒரு வலது கை வார்னர். கட் ஷாட், புல் ஷாட் அனைத்தும் அடிக்கிறார். அவர் மிகவும் சக்திவாய்ந்த ஷாட்களையும் ஆடக்கூடியவர்" என்றும் கூறினார் ஹெய்டன்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!