Sports
"அவர் என்னை விட திறமை வாய்ந்தவர், அதிக போட்டிகளில் ஆடுவார்" - BCCI தலைவர் கங்குலி ஆருடம் !
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி. தன்னை விட கோலி டெக்னிக்கில் சிறந்தவர் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார் அவர். தொடர்ந்து பல காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த விராட் கோலி, 2022 ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் தன் ஃபார்மை மீட்டெடுத்தார். 2019 நவம்பர் மாதத்துக்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் சதமே அடிக்காமல் இருந்த விராட், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசியாக ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கடைசியாக அவர் சதம் அடித்திருந்தார்.
ஒரு யூ டியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் விராட் கோலியின் பேட்டிங் திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார் கோலி. கோலியின் கிரிக்கெட் கரியர் முடியும் போது, அவர் தன்னை விட அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியிருப்பார் என்று கூறியிருக்கிறார் கங்குலி.
"இங்கு ஒரு கிரிக்கெட் வீரராக டெக்னிக்கை தான் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அவர் என்னை விட திறமை வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வேறு வேறு காலகட்டத்தில் விளையாடியிருக்கிறேன். அவர் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கிறார். அவர் ஓய்வு பெறும்போது என்னை விட அதிக போட்டிகளில் விளையாடியிருப்பார் என்று நினைக்கிறேன். இப்போது என்னை விட குறைவாகத்தான் விளையாடியிருக்கிறார். ஆனால், அவர் அதிகம் விளையாடி விடுவார். அது மிகவும் அற்புதமான விஷயம்" என்று கூறியிருக்கிறார் கங்குலி.
ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பி சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார் கங்குலி. கோலி போன்ற ஒரு திறமைசாலி நீண்ட நாள்கள் அப்படியே இருந்துவிட மாட்டார்கள் என்று கூறியிருந்தார் கங்குலி.
"அவர் ஒரு மிகப் பெரிய வீரர். நீண்ட காலமாக சர்வதேச அரங்கில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவர் ரன் குவிக்க தனக்கென்று ஒரு தனியான விதி வைத்திருந்தார் என்று எனக்கு தெரியும். அவரைப் போன்ற அதீத திறமை கொண்ட ஒரு வீரர் இப்படி நீண்ட காலமாக ரன் குவிக்காமல் இருந்துவிடமாட்டார்கள். அவர் நிச்சயமாக ரன் குவிப்பார் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர் மிகச் சிறந்த வீரர். இல்லையெனில் அவர் இத்தனை ரன்கள் குவித்திருக்கமாட்டார்" என்று கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது கூறியிருந்தார் சௌரவ் கங்குலி.
யூ டியூப் சேனலுக்குத் தற்போது கொடுத்த பேட்டியில் இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் பேசினார் கங்குலி. இந்த தலைமுறை வீரர்கள் தங்கள் காலகட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட்டர்களை விடவும் மிகவும் அக்ரஸிவாக விளையாடுகிறார்கள் என்று கூறிய அவர், இந்த ஆட்டம் எப்படி மாறியிருக்கிறது என்பதையும் விளக்கினார்.
"ஆம் ஆட்டம் ஆடும் முறை மாறியிருக்கிறது. இப்போது ஆட்டம் வேகமாக மாறியிருக்கிறது. கொஞ்சம் சிறிதாகவும் வேகமாகவும் மாறியிருக்கிறது. அதிக சிக்ஸர்கள் அடிக்கப்படுகின்றன. அதிக பௌண்டரிகள் அடிக்கப்படுகின்றன. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அதிக பந்துகளை வீரர்கள் விடுவதில்லை. ஆம் ஆட்டம் நிறையவே மாறிவிட்டது" என்று கூறியிருக்கிறார் 50 வயதான சௌரவ் கங்குலி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!