Sports
”மற்ற வீரர்களுக்கும் இதே வாய்ப்பு கிடைக்குமா?”.. விராட் கோலி சதம் குறித்து விமர்சித்த கௌதம் கம்பீர்!
3 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் சதமடிக்காமல் அணியில் நீடித்த ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அது விராட் கோலி மட்டுமே என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
கடந்த வியாழக் கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் விளாசினார். 1021 நாள்கள் கழித்து சர்வதேச அரங்கில் சதம் அடித்தார் கோலி. இதன் மூலம் நீண்ட நாள்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்திய அந்த 71வது சர்வதேச சதத்துக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்தது. கோலியின் இந்த சதத்தின் மூலம் துபாயில் நடந்த அந்தப் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி.
இந்த சதம் பற்றி தன்னுடைய வெளிப்படையான கருத்தைக் கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர். இதுபோன்ற சூழ்நிலையை வேறு எந்த வீரராலும் கடந்து வந்திருக்க முடியாது என்று கூறிய கம்பீர், வேறு எந்த வீரருக்கும், எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்றும் கூறியிருக்கிறார்.
நவம்பர் 23, 2019 அன்று கொல்கத்தாவில் நடந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்தார் விராட் கோலி. அந்தப் போட்டியில் 136 ரன்கள் எடுத்தார் அப்போதைய இந்திய கேப்டன். அதன் பிறகு சர்வதேச அரங்கில் விளையாடிய சுமார் 83 போட்டிகளில் அவர் சதம் அடிக்கவே இல்லை. சமீபத்திய போட்டிகளில் அவர் நல்ல ஃபார்மில் இல்லாததால் அவர் மீண்டும் ஒரு சதம் அடிப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது.
இருந்தாலும் மீண்டும் சிறப்பாக முறையில் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் விராட் கோலி. இந்த சதத்திற்கு முன்பாக, இந்த ஆசிய கோப்பையின் முந்தைய 4 போட்டிகளில் 2 அரைசதங்கள் அடித்திருந்தார் அவர். போட்டி முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், இதற்கு முன்பு விராட் கோலி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்புகளை அணி நிர்வாகம் தொடர்ந்து வழங்கியது என்று கூறியிருக்கிறார். வேறு எந்த வீரரும் 3 ஆண்டுகள் சுமாராக ஆடிய பிறகும் இவ்வளவு வாய்ப்பு பெற்றிருக்கமாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.
"3 ஆண்டுகள் என்பது மிகப் பெரிய காலகட்டம். அது ஒன்றும் 3 மாதங்கள் அல்ல. நான் ஒன்றும் அவரை விமர்சிக்கவில்லை. அவர் இந்த வாய்ப்புகளுக்கெல்லாம் சரியானவர் என்றுதான் கூறுகிறார். ஏனெனில் கடந்த காலத்தில் அவர் ரன்களாக அடித்துக் குவித்திருக்கிறார். ஆனால் வேறொரு இளம் வீரர் சர்வதேச அரங்கில் 3 ஆண்டுகள் சதமடிக்காமல் அணியில் நீடித்திருக்கமாட்டார்" என்று கூறியிருக்கிறார் கம்பீர்.
"இந்த சதம் எப்படியும் எதிர்பார்த்ததுதான். அதுவும் சரியான நேரத்தில் வந்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சதம் வந்திருக்கிறது. அவர் முதுகில் இருந்த வேதாளம் இப்போது இறங்கியிருக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை நேர்மையாக விவாதிப்போம். இதே காலகட்டத்தை இந்த அணியில் இன்னொரு வீரர் சமாளித்திருப்பாரா என்று தெரியவில்லை. அஷ்வின், ரஹானே, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் அணியில் இருந்து கழட்டிவிடப் பட்டிருக்கிறார்கள். 3 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் சதமடிக்காமல் அணியில் நீடித்த ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அது விராட் கோலி மட்டுமே. அவர் இந்த வாய்ப்புகளுக்கு சரியானவும் கூட" என்று கூறியிருக்கிறார் கம்பீர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு