Sports
"விராட் கோலியின் இடத்துக்கு போட்டியா?" - இந்திய வீரரின் கருத்துக்கு நியூஸிலாந்து வீரர் பதிலடி !
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பற்றிய விமர்சனங்கள் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அது விவாதங்களுக்கு வித்திடுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டிக்குப் பிறகு விராட் கோலியின் இடம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய இடம் நிரந்தரமானது இல்லை என்று அவர் குறிப்பிட, அவரை இடைமறித்து தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார் முன்னாள் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் நடந்த உரையாடலில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "இதை இரண்டு வகையில் பார்க்கலாம். இந்திய அணியின் புதிய ஆட்ட அணுகுமுறையை விராட் கோலி ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது அவருடைய வழக்கத்துக்கு மாறானது. ஏனெனில் அவர் களத்தில் அதிக நேரம் விளையாட நினைப்பவர். ஆனால் இந்த அணுகுமுறை அவருக்கு அந்த நேரத்தை வழங்காது. இருந்தாலும் அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இப்போது அவர் அணியின் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் ஹாங் காங் அணிக்கெதிராக எத்தனை ரன்கள் எடுத்தாலும், பாகிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக விளையாடும்போது மீண்டும் முதல் கட்டத்தில் இருந்து தான் அவர் தொடங்கவேண்டும்.
பல இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அது கோலிக்கும் தெரியும். அவர்கள் பிளேயிங் லெவனில் கோலியின் இடத்துக்கு குறிவைத்துக்கொண்டிருப்பது இன்னொரு பெரிய பிரச்சனை. தீபக் ஹூடா சமீபத்தில் ஒரு சதம் அடித்தார். மேலும் இஷன் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்றவர்களும் சிறப்பாக விளையாடிகொண்டிருக்கிறார்கள். அவருக்கு இது தெரியும் என்பதே மிகப்பெரிய பிரச்சனை. ஆனால் அவர் ஒரு போராளி. அவர் இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வார் என்று நம்புகிறேன்" என்று கூறினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இந்த விவாதத்தில் பங்குபெற்றிருந்த ஸ்காட் ஸ்டைரிஸ் உடனே இடைமறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூறினார். மற்ற வீரர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், யாரும் கோலியின் இடத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கூறினார் அவர்.
"இந்த அணியில் கோலியின் இடம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னால் சுத்தமாக இதை நம்ப முடியவில்லை. இஷன் கிஷன், தீபக் ஹூடா போன்றவர்கள் சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு அணியில் இடம் பெறக் கூறியவர்கள் தான். ஆனால் அதற்காக கோலியின் இடத்தை நாம் இங்கு கேள்விக்குள்ளாக்குகிறோமா?" என்று கேட்டார் ஸ்டைரிஸ்.
மேலும் பேசிய அவர், "ஆம், பல வீரர்கள் அணியில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது கோலிக்கு தெரியும். ஏதோவொரு இடத்தை அவர்கள் கைப்பற்ற காத்திருக்கிறார்கள் எனும்போது, தன் இடம் நிரந்தரமானது என்ற நிம்மது நிச்சயம் கிடைக்காது. இருந்தாலும் இந்திய அணி நிச்சயம் விராட் கோலியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும். அதீத தைரியம் உள்ளவர்கள் மட்டுமே அவரை விட்டுச் செல்வார்கள்" என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!