Sports
”சச்சின்,சேவாக்,கோலிக்கு பின்னர் இந்த வீரருக்கு பந்து வீச ஆசை” -விருப்பத்தை வெளிப்படுத்திய பிரெட் லீ !
பிரெட் லீ, ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் அலறவிட்ட ஒருவர். தன்னுடைய அசுரத் தனமான வேகத்தாலும் அசாத்திய துள்ளியத்தாலும் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருந்தார் லீ. சுமார் 3 தசாப்தங்கள் பரவியிருந்த தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார் அவர். மேலும் 221 ஒருநாள் போட்டிகளிலும், 25 சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்தார் அவர்.
கிரிக்கெட் உலகம் அஞ்சி நடுங்கிய ஒரு சில பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவராக இருந்தார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் பல தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீசினார் அவர். இந்தியாவுக்கு எதிராக பல விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் அவர். இந்தியாவுக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டுகளும், 33 ஒருநாள் போட்டிகளில் 55 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார் அவர்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசியிருக்கிறார் பிரெட் லீ. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தற்போதைய இந்திய அணி வீரர் ஒருவருக்கு எதிராக பந்துவீசு விரும்புவதாகக் கூறியிருக்கிறார் அவர். 45 வயதான பிரெட் லீ, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒரு இந்திய நட்சத்திரத்தைக் குறிப்பிட்ட லீ, அவர் தன்னுடைய பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தாலும் பரவாயில்லை பந்துவீசினாலே போதும் என்று கூறியிருக்கிறார்.
"சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு ஜாம்பவானுக்கு எதிராக பந்துவீசிய மிகச் சிறந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது. விராட் கோலியின் கரியர் ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கு எதிராகவும் பந்துவீசியிருக்கிறேன். விரேந்திர சேவாக்குக்கு எதிராகவும் கூட பந்துவீசியிருக்கிறார். இப்போது ரிஷப் பண்ட் போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று ரசிகர்களுடன் சமீபத்தில் நடந்த உரையாடல் ஒன்றில் தெரிவித்தார் பிரெட் லீ.
"அவர் மிகவும் திறமையான ஒரு வீரர், கிரீஸுக்கு நடுவே நன்றாக நகர்ந்து விளையாடுபவர், மிகவும் அதிரடியாக அக்ரஸிவாக விளையாடுபவர். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக என்னை நான் சோதித்துப் பார்க்க விரும்புவேன். ஆரை சில முறை பார்த்திருக்கிறேன். அவர் அனைத்து வழக்கங்களுக்கும் மாறாக விளையாடுபவர். அதனால் அவருக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் சிறப்பாக இருக்கும். ஒருவேளை அவர் என் பந்தில் சிக்ஸர் விளாசலாம். இருந்தாலும் பரவாயில்லை" என்று கூறியிருக்கிறார் பிரெட் லீ.
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் ரிஷப் பண்ட். அதன்பின் இந்திய அணியின் நம்பர் 1 விக்கெட் கீப்பராகவும் உருவெடுத்தார். இப்போது இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடும் சில வீரர்கள் இவரும் ஒருவராக இருக்கிறார். கடந்த மாதம், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு நாடுகளிலும் (டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்) சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார் பண்ட். இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பண்ட், 5 சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளிலும் 54 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார் அவர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?