Sports
Asia Cup 2022.. பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுள்ள சவால்கள்!
இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் வேகமாக முக்கிய அங்கமாக மாறி வருகிறார். டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசும் அவர் திறமையும், துள்ளியமான யார்க்கர்களும் அவரை நம்பிக்கையான வீரராக மாற்றியிருக்கிறது. சீனியர் வீரர் புவனேஷ்வர் குமாரும் சரியான தருணத்தில் ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பந்துவீச்சு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியின் பந்துவீச்சை இவர்கள் பலப்படுத்துவார்கள். இருந்தாலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ராவை மிஸ் செய்யும். இந்தத் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் இருவரும் பங்கேற்அவில்லை. அவர்கள் இருவரும் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் காயத்திலிருந்து மீண்டுகொண்டிருக்கின்றனர். பும்ரா இல்லாத நிலையில், டெத் ஓவர்களில் ஆர்ஷ்தீப் சிங் பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பங்கர். அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடரில் புவனேஷ்வர் குமார் கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் அவர்.
"இந்திய அணிக்கு ஆர்ஷ்தீப் சிங் சிறந்த அப்ஷனாக இருப்பார். அவர் யார்க்கர் வீசுவதில் சிறப்பாக செயல்படுகிறார். மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார். டெத் ஓவர்களில் பந்துவீசுவதற்கான சிறந்த மனநிலையும் அவருக்கி இருக்கிறது. அதனால் இந்தத் தொடரில் பும்ரா இல்லாதது டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு அவ்வளவு பெரிய இழப்பாக இருக்காது. ஆனால் மிடில் ஓவர்களில் நிச்சயம் இந்திய அணி அவரை மிஸ் செய்யும்" என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் சஞ்சய் பங்கர்.
இந்திய அணியில் எப்படி ஜஸ்ப்ரித் பும்ரா இல்லையோ, அதேபோல் பாகிஸ்தான் அணியிலும் அவர்களின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இல்லை. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் முழங்கால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
"புவனேஷ்வர் குமார் அவர் தோள்களில் அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். பும்ரா இல்லாத நிலையில் அவர் பவர்பிளேவில் 2 ஓவர்களும், டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களும் வீசுவது அணிக்கு சரியாக இருக்கும். அவருடைய பலமும் அதுதான். என்னைப் பொறுத்தவரை இந்திய அணி மிடில் ஓவரில் பும்ராவைப் பயன்படுத்திய அந்த ஒரு ஓவரில் நிச்சயம் அவர் இல்லாததை உணரும்" என்று கூறியிருக்கிறார் பங்கர்.
"யுஸ்வேந்திர சஹால் மிகவும் புத்திசாலித்தனமான பௌலர். பேட்ஸ்மேன்களின் உளவியலோடு விளையாடுவது எப்படி என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எந்த பேட்ஸ்மேனுக்கு என்ன விதமான பந்து வீசவேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் அவர் இந்திய அணிக்கு தொடர்ந்து இத்தனை காலம் விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்திருக்கிறார். வைட் லைனைப் பயன்படுத்தி அவர் பந்துவீசுவது, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கூக்ளி வீசுவது எல்லாம் பார்க்கும்போது நிச்சயம் அவர் மிடில் ஓவர்களில் உங்களுக்கு விக்கெட் எடுத்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்துவிடும்" என்றும் கூறியிருக்கிறார் சஞ்சய் பங்கர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!