Sports

ஜடேஜாவுக்கு மாற்று அக்‌ஷர் படேல்தான்.. அவரை ஏன் தேர்வு செய்யவில்லை: கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்!

2022 ஆசிய கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கிறது. அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை திங்கள் கிழமை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். கடந்த சில தொடர்களாக விளையாடாத முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயம் காரணமாக விலகியிருந்த துணைக் கேப்டன் கே.எல். ராகுல் போன்றவர்கள் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினர். இந்த அணியில் மிகப்பெரிய அதிர்ச்சிகள் எதுவும் இல்லை என்றாலும் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிப்பதாகக் கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல். இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும், இந்த மாதம் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் முக்கிய அங்கமாக விளங்கினார் அக்‌ஷர் படே. ஆனால் ஆசிய கோப்பைக்கான அணியில் அவர் பேக் அப் வீரராகவே அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தொடருக்கான இந்திய அணியைப் பற்றிப் பேசிய பார்த்திவ் படேல், இந்திய அணிக்குத் தேவைப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் அக்‌ஷர் படேல் சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். ரவீந்திர ஜடேஜாவுக்கு பேக் அப் ஆக ரவிச்சந்திரன் அஷ்வினுக்குப் பதில் அக்‌ஷர் இடம் பெற்றிருக்கவேண்டும் என்றும் கூறினார் அவர்.

"இந்த அணியில் அக்‌ஷர் படேல் இல்லாதது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்திய அணிக்கு எப்போதெல்லாம் ஒரு முக்கியமான பெர்ஃபாமன்ஸ் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அதைக் கொடுத்திருக்கிறார் அக்‌ஷர் படேல். அவரிடம் இந்திய அணி என்னவெல்லாம் எதிர்பார்த்ததோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறார்" என்று தன்னுடைய யூ டியூப் சேனலில் தெரிவித்தார் அவர்.

"அவர்கள் கடந்த உலகக் கோப்பை தொடரில் அஷ்வினை முயற்சி செய்து பார்த்தார்கள். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை உலகக் கோப்பைக்கு ஆஃப் ஸ்பின் தேவைப்படும் என்று அவர்கள் நினைத்தால், அதற்கு தீபக் ஹூடா இருக்கிறார். அதனால் ஜடேஜாவுக்கு பேக் அப் ஆக அக்‌ஷர் படேல் தேர்வு செய்யப்பட்டிருக்கவேண்டும்" என்று கூறினார் பார்த்திவ் படேல்.

2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடினார். ஆனால் அதன்பிறகு அவர் இந்திய சர்வதேச டி20 அணியில் இடம்பெறவில்லை. சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடருக்குத்தான் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

அணித் தேர்வைப் பற்றிப் பேசிய பார்த்திவ் படேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் இந்தத் தொடருக்கு இந்திய அணி 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்திருப்பது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாகக் கூறினார்.

"ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் அந்தத் தொடருக்கு இந்திய அணி 4 ஸ்பின்னர்களைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த மைதானங்களின் தன்மையை யோசித்துப் பார்க்கும்போது இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. 4 ஸ்பின்னர்களை எடுத்திருப்பதால் அவர்கள் 3 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார்கள். ஒரு வேகப்பந்துவீச்சாளர் குறைவு என்று நான் நினைக்கிறேன். 3 ஸ்பின்னர்களையும், 4 வேகப்பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்திருக்கவேண்டும். இங்கு ஐபிஎல் தொடர் நடந்தபோது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளங்கள் ஒத்துழைத்ததை நாம் பார்த்தோமே" என்று கூறியிருக்கிறார் பார்த்திவ் படேல்.

Also Read: போட்டிக்குச் சென்ற போது கார் விபத்தில் சிக்கிய பிரபல அம்பயர் பலி - யார் இந்த ரூட் கர்ட்சன் ?