Sports

"நீங்கள் யோக்கியமா?" -முன்னாள் கேப்டன் அசாருதீனை வறுத்தெடுக்கும் இணையவாசிகள் ! காரணம் என்ன?

இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்துமுடிந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்த முறை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, பார்படாஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளின் அணிகள் கலந்துகொண்டன.

இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

இதனைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் 3-ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்தில் 33 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பொறுப்புடன் அடித்து ஆடி அரைசதம் அடித்தார்.

இதனால் ஒருகட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்கள் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சரியாக ஆடாததால் 152 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி இந்த தொடரில் வெள்ளி பதக்கம் வென்றது.

வெள்ளி வென்ற இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் இந்திய அணியை விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியை சாடியுள்ள அவர் அதில், 'குப்பை பேட்டிங்கை இந்திய அணி மேற்கொண்டது. கொஞ்சமும் பொது அறிவு இல்லை. வெற்றிகரமான ஒரு விளையாட்டை தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுத்துவிட்டனர்' என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பலரும் முகமது அசாரூதினை விமரிசித்து வருகின்றனர். அசாரூதின் காலத்தில் இந்திய அணி பலமுறை வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் அவரை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: #CHESSOLYMPIAD : ஓபன் & மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்று சாதனை !