Sports
"நான் இதை முன்பே செய்திருக்க வேண்டும்"- பழைய தவறுக்கு இப்போது வருத்தப்படும் தினேஷ் கார்த்திக்!
தினேஷ் கார்த்திக் - இந்திய டி20 அணியில் இப்போது முக்கிய அங்கமக மாறியிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஃபினிஷர் ரோலை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கும் அவர், அதை மிகவும் ரசிக்கிறார். 37 வயதான தினேஷ் கார்த்திக், தன்னுடைய இந்த சமீபத்திய செயல்பாடு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்க உதவும் என்று நம்புகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிவரும் சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் 19 பந்துகளில் 41 ரன்கள் விளாசி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார் கார்த்திக். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார்.
தற்போதைய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. 20 ஓவர் போட்டிகளில் ஃபினிஷராக செயல்படவேண்டும் என்பதுதான் அவரிடம் இந்திய அணி எதிர்பார்ப்பது. இந்த எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார் கார்த்திக். கடந்த சில மாதங்களில் மிகச் சிறப்பாக விளையாடிவரும் கார்த்திக், தன்னுடைய ஹிட்டிங்கில் சில காலம் முன்பே கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய அணிக்காக 2004ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆனார் தினேஷ் கார்த்திக். ஆனால் அவருடைய கிரிக்கெட் பயணம் எளிதாக இருக்கவில்லை. அணிக்குள் வருவதும் போவதுமாகவே இருந்துவந்தார். 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார்.
"சமீப காலமாக என்னுடைய பவர் ஹிட்டிங்கில் தான் நான் அதிகமாக கவனம் செலுத்தினேன். அதை என்னுடைய கரியரில் சற்று முன்பாகவே முயற்சி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் நன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது" என்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச டி20 போட்டிக்கு முன்பாகக் கூறினார் தினேஷ் கார்த்திக்.
தற்போதைய அணி நிர்வாகத்தை வெகுவாகப் பாராட்டிய தினேஷ் கார்த்திக், அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவது பற்றியும் பேசினார். "இந்த நிர்வாகம் எனக்கு ஆதரவு கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைத் தான் என் கரியர் முழுவதும் நான் எதிர்பார்த்திருந்தேன். என் மீது அளவு கடந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் நல்ல செயல்பாடுகள் மூலம் நன்றி செலுத்துவதுதான் சரி. என்னுடைய செயல்பாடுகள் மூலம் இந்திய அணி இலக்குகளைக் கடக்க உதவவேண்டும்" என்று கூறியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
2010ம் ஆண்டு முதல் 2017 வரையிலான 7 ஆண்டு காலத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால் இப்போது அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கப் போட்டியிடும் முன்னணி வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
"வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தற்போது வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு வீரர் தன்னை நிரூபிக்கும் வகையில் வாய்ப்பு கொடுத்துவிட்டு அதன்பிறகு அடுத்த வீரரை நோக்கி நகர்வதுதான் சரியான விஷயமாக இருக்கும். இந்திய அணியில் இப்போது எண்ணற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் கொடுத்த செயல்பாட்டுக்கான வாய்ப்புகளைப் பெறுவதும் மிகவும் முக்கியம். இந்திய பயிற்சியாளர் குழுவின் அணுகுமுறையை நிச்சயம் மதிக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?