Sports

"என்னால் சேவாக்,சச்சின் போல இருந்திருக்க முடியாது"- தனது உளவியல் பிரச்சனை குறித்து மனம் திறந்த டிராவிட்!

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட்டில் பொறுமை என்ற சொல்லின் அர்த்தம் ராகுல் டிராவிட் என்பதாகத்தான் இருந்தது. டெஸ்ட் மேட்ச் பேட்டிங்கின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் டிராவிட். விரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் போன்ற அற்புத வீரர்களை இந்திய அணியில் ஒன்றிணைத்த தூண் டிராவிட் தான்.

மகத்தான பல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கும் அவர் எப்படித்தான் அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மனநிலையை எப்படி நிதானமாக வைத்திருக்க முடிந்ததோ என்று ஒட்டுமொத்த உலகமும் வியந்திருக்கிறது. அது தன்னுடைய இயற்கையான சுபாவத்தின் காரணம் என்று கூறியிருக்கிறார் டிராவிட்.

"என்னுடைய கரியரைத் திரும்பிப் பார்த்தால் தெரியும், ஆற்றலை சரியாக ஒருங்கிணைப்பது தான் அனைத்தையும் மாற்றும் என்பது புரியும். என்னுடைய உள ஆற்றலை என்னால் சிறப்பாக ஒருங்கிணைக்க முடிந்தது. போட்டிகளில் விளையாடாத போதும் கூட என் பேட்டிங்கை நினைத்து, அதைப் பற்றி வருந்தி, அதன்பிறகு அதிகம் யோசித்தே நிறைய ஆற்றலை செலவு செய்வேன். ஒருகட்டத்தில் அது எந்த வகையில் என் பேட்டிங்குக்கு உதவவில்லை என்று புரிந்து கொண்டேன். எனக்கு புத்துணர்ச்சி தேவைப்பட்டது. கிட்டத்தட்ட கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு வாழ்க்கையைக் கண்டுகொண்டேன்" என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவின் 'இன் தி ஜோன்' பாட்காஸ்ட்டில் கூறியிருக்கிறார் டிராவிட்.

"உண்மையை சொல்லப்போனால் என்னால் எப்போதும் வீரு (விரேந்திர சேவாக்) போல இருந்திருக்க முடியாது. அவரால் மிகவும் எளிதாக மனதை விலக்கி வைக்க முடியும். அவருடைய பொதுவான தன்மை அப்படி. அந்த அளவுக்கு என்னால் செல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நிலமை மோசமாகும் தருணங்களை என்னால் உணர முடிந்தது. நான் எப்போது மிகவும் கடுமையாக யோசிக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன். என் மனதை விலக்கி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஏனெனில் நான் கொண்டிருந்தது உளவியல் ரீதியான பிரச்சனை தான். பயிற்சியிலேயோ, ஜிம்மிலேயோ உடலுக்கு செலவளிக்கும் அந்த கூடுதல் நேரத்தைப் போல் மனதுக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம் என்று புரிந்துகொண்டேன். அவ்வளவு உழைப்பும் கொடுத்துவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்றால் அனைத்தும் வீணாகிவிடும். அதை மூன்று நான்கு ஆண்டுகளில் உணர்ந்து கொண்டு அதில் வேலை செய்யத் தொடங்கினேன். அது எனக்குப் பெரிதாக உதவியது" என்று கூறினார் டிராவிட்.

"என் கரியர் போகப் போக இன்னொரு விஷயத்தையும் நான் புரிந்துகொண்டேன். என்னால் விரேந்திர சேவாக் போல் அதிவேகமாக ரன் எடுக்க முடியாது. சச்சின் டெண்டுல்கர் அளவுக்கும் கூட என்னால் வேகமாக ஆட முடியாது. எனக்கு எப்போதுமே நிதானம் தான் துணையாக இருக்கும். எனகும் பௌலர்களுக்கும் இடையிலான போட்டியை நான் மிகவும் விரும்பினேன். அதை எங்கள் இருவருக்கும் இடையிலான தனிநபர் போட்டியாக ஒருகட்டத்தில் மாற்றினேன். அது என் கவனத்துக்கு இன்னும் பெரிதாக உதவியது" என்றூம் கூறினார் ராகுல் டிராவிட்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு ஃபார்மட்டிலும் 10,000 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டு இந்தியர்களுள் டிராவிட்டும் ஒருவர். இன்னொருவர் சச்சின் டெண்டுல்கர்.

Also Read: ரிஷப் பந்த் ஆட்டத்தால் பல மில்லியன் டாலர் லாபம் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.. பின்னணி என்ன?