Sports
மோசமான ஆட்டத்தால் அணியில் தொடர்வதில் சிக்கல்: விராட் கோலியை விமர்சித்த முன்னாள் இந்திய அணி வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக சர்வதேச டி20 தொடரில் இவ்விரு அணிகளும் மோதவிருக்கின்றன. இந்தத் தொடருக்கான முதல் போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ஆனால், இரண்டாவது டி20 போட்டிக்கு முன் கோலி அணிக்குத் திரும்பிவிடுவார். ஆனால், பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். இதுபற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் வாசிம் ஜாஃபர், இப்போதைக்கு அணியில் கோலிக்கு இடம் கிடைத்துவிடும். ஆனால், எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது அவரது ஃபார்மைப் பொறுத்ததுதான் என்று கூறியிருக்கிறார்.
தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் மிடில் ஆர்டர் இடங்களுக்கு கடுமையாகப் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் எனும்போது, இந்தியாவின் சர்வதேச டி20 அணியில் அவருக்கான இடம் உறுதியானதுதானா என்பது கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்றாலும், இதை பல விஷயங்கள் சேர்ந்து தான் தீர்மானிக்கப்போகின்றன. அதில் முக்கியமான ஒன்று, இதற்கு முன்பு இந்திய அணிக்காக கோலி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்ற செண்டிமென்ட்கள்.
சமீபத்திய ஃபார்மை பார்த்தோமென்றால், கோலியின் எண்கள் மிகவும் சுமாராகவே இருக்கின்றன. ஐபிஎல் 2022 தொடரில் வெறும் 115 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் ஸ்கோர் செய்தார் விராட் கோலி. இப்படி இருக்கையில் கோலிக்கு சாதகமாக வாதிடுவது மிகவும் கடினமான விஷயம் தான். இருந்தாலும் கோலியின் பங்களிப்புகளை எப்படி மறந்துவிட முடியும். சுமார் ஒரு தசாப்தம் அனைத்து ஃபார்மட்கலிலும் ஒட்டுமொத்த உலகிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவர் அல்லவா அவர். டி20 உலகக் கோப்பை சீக்கிரம் வரும் நிலையில், இனி வரப்போகும் ஒவ்வொரு போட்டியுமே இந்த உலகக் கோப்பைக்கான தேர்வு தான். இங்கிலாந்துக்கு எதிரான இந்த சர்வதேச டி20 தொடர் நிச்சயமாக கோலியின் மீது அனைவரின் பார்வையும் அதிகப்படுத்தும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் போன்ற முன்னணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டிக்கான அணிக்குத் திரும்பிவிடுவார்கள். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றிருக்கும் நிலையில், இந்தத் தொடர் வெற்றி மிகவும் முக்கியம். அதனால், கோலி அவ்வளவு எளிதாக பிளேயிங் லெவனில் இடம் பெற்றுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துவருகிறது. இதுபற்றிப் பேசிய வாசிம் ஜாஃபர், இப்போதைக்கு அவர் அணியில் இடம் பெற்றுவிடுவார் என்றும், தொடர்ந்து விளையாடுவது அவர் ஃபார்மைப் பொறுத்தது என்றும் கூறியிருக்கிறார்.
"கோலி அணியில் இடம் பிடித்துவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அடுத்த போட்டிகளில் அவர் ஃபார்ம் பெரிய அங்கம் வகிக்கும். அவர் ஐபிஎல் ஸ்டிரைக் ரேட் அவ்வளவு சிறப்பாக இல்லை. அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இல்லை. தீபக் ஹூடா உங்களுக்கு பௌலிங் ஆப்ஷனும் கொடுக்கிறார். ஆனால், அவர் நேரடியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டார். கோலிக்கு இப்போதைக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால், அதன்பிறகு அவரின் ஃபார்மை தேர்வாளர்கள் கருத்தில் கொள்வார்கள். ஏனெனில், பல இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த டி20 உலகக் கோப்பையில் அணியின் ஸ்டிரைக் ரேட், அணுகுமுறை எல்லாமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அதனால், நாம் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் வாசிம் ஜாஃபர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?