Sports
ஒரே போட்டியில் இத்தனை சாதனையா? சச்சின், தோனியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரிஷப் பண்ட்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக பிர்மிங்கமில் நடந்துகொண்டிருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் அடித்து அசத்தினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துகொண்டிருக்கையில், தன் சிறப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோரை அவர் உயர்த்தியுள்ளார் .
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மிகவும் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை நிறைவு செய்தார். 89 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்த ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் மஹேந்திர சிங் தோனி அந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். 2005ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 93 பந்துகளில் சதமடித்திருந்தார் தோனி. அதை விட 4 பந்துகள் குறைவான பந்தில் சதமடித்து தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார் பண்ட்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தன் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், இன்னொரு முக்கிய சாதனையையும் படைத்திருக்கிறார். மிக இளம் வயதில் சர்வதேச அரங்கில் 100 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் பண்ட். வெள்ளிக் கிழமை அன்று, இங்கிலாந்தின் இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச்சின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து, சிக்ஸரில் சதமடித்தார் ரிஷப் பண்ட்.
இதற்கு முன்பு, இளம் வயதில் சர்வதேச அரங்கில் 100 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவர் தன்னுடைய 25வது வயதில் அந்த சாதனையைப் படைத்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் துணைக் கேப்டனுமான சுரேஷ் ரெய்னா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறர். அவர் 25 வருடம், 7 நாள்கல் ஆகியிருந்தபோது சர்வதேச அரங்கில் 100 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
111 பந்துகளில் 146 ரன்கள் விளாசிய பண்ட், 19 ஃபோர்களும், 4 சிக்ஸர்களும் விளாசினார். தன்னுடைய 31வது டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் பண்ட், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 48 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் பண்ட், போட்டிக்கு ஒரு சிக்ஸர் வீதம் 24 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் 31 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் பண்ட். ஆக மொத்தம் இதுவரை 103 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 249 ஃபோர்களும் அடித்திருக்கிறார் அவர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?