Sports

”அடுத்த Cool கேப்டன் ஹர்திக் பாண்டியா”.. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஓபன் டாக்!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய தேசிய அணியின் கேப்டனாக முதல் முறையாக கேப்டனாகப் பணியாற்றினார் ஹர்திக் பாண்டியா. போட்டியின் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட்டதால், 12 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது. சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் எடுத்ததோடு மட்டுமல்லாமல், 12 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார்.

இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், ஹர்திக் பாண்டியாவை வெகுவாகப் பாராட்டினார். அணியின் பௌலர்களுக்கு, தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சுதந்திரத்தை ஹர்திக் கொடுக்கிறார் என்று குறிப்பிட்டார் சஹால்.

"நான் நினைக்கும் இடத்தில், நினைத்தபடி பந்து வீசும் சுதந்திரத்தை எனக்குக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் விளையாடும்போது, அந்த சூழ்நிலை மிகவும் கூலாக இருக்கிறது. என் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முழு சுதந்திரத்தையும் அவர் கொடுக்கிறார்" என்று முதல் போட்டியின் பரிசளிப்பு விழா முடிந்ததும் கூறினார் சஹால்.

மலாஹிதேவின் சூழ்நிலையில் விளையாடுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றியும் விளையாட்டாக குறிப்பிட்டிருக்கிறார் சஹால். "இப்படி மிகவும் குளிரான இந்த சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் ஒரு ஃபிங்கர் ஸ்பின்னர் போல உணர்ந்தேன். சில சமயங்களில் இப்படியான சூழ்நிலைகளில் விளையாடுவது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும் எல்லா விதமான சூழ்நிலைகளுக்கும் பழகியே ஆகவேண்டும்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் 29 பந்துகள் சந்தித்த தீபக் ஹூடா, 47 ரன்கள் விளாசினார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா 12 பந்துகள் சந்தித்து 24 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடியதால் 9.2 ஓவர்களில் 109 என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. இவர்களின் அற்புதமான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் மீதமிருக்கும் போதே போட்டியை முடித்தது. அயர்லாந்து பந்துவீச்சைப் பொறுத்தவரை இளம் வீரர் கிரெய்க் யங் சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஜோஷுவா லிட்டில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அயர்லாந்து பேட்டிங்கில் ஹேரி ஹெக்டர் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். அவரின் அதிரடியான ஆட்டத்தால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஹர்திக் பாண்டியா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Also Read: " சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம்!