Sports

ஆஸ்திரேலிய அணிக்கு நன்றி கூறிய இலங்கை ரசிகர்கள்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் காரணம் என்ன?

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்கிற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை இலங்கை மண்ணில் இலங்கை அணி வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்டுள்ளது.

அதுவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அணி வலிமையான அணியாக திகழ்ந்து வந்தது. ஆனால் அதன் முன்னணி வீரர்கள் விலகிய நிலையில் சமீப ஆண்டுகளாக அந்த அணி பலவீனமான காட்சி அளித்தது. இந்த நிலையில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இலங்கை வீழ்த்தியுள்ளது அந்த அணிக்கு பெரும் உத்வேகமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரமும் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அங்கு வெளிநாட்டவர்கள் வருகை பெரும் அளவு குறைந்தது. இந்த சூழலில் இலங்கைக்கு ஆஸ்திரேலிய அணி விளையாட வந்தது சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

இதை இலங்கை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளது 5- வது ஒரு நாள் போட்டியின்போது வெளிப்படையாக தெரிந்தது. இலங்கை அணி ரசிகர்கள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய அணி ஜெர்சியை/மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்துகொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

மைதானத்தில் பல பகுதியில் நன்றி ஆஸ்திரேலியா என்ற பதாகைகள் தென்பட்டன. இலங்கை அணி ரசிகர்களின் இந்த செய்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய வீரர்களும் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக கூறிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச், "இலங்கை அணி ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எங்களுக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். மைதானத்தில் எங்கே பார்த்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளது இது எங்களுக்கு சந்தோஷத்தை வரவழைக்கிறது" எனக் கூறினார்.

இந்த கிரிக்கெட் தொடர் மூலம் வருங்காலங்களில் இலங்கைக்கு அதிக வெளிநாட்டவர்கள் வருவார்கள் எனவும், இலங்கை மீது இருந்த ஒரு கரும்புள்ளி அழிய இது முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: விமானத்தில் செயலிழந்த ஏ.சி.. மயக்கமடைந்த பயணிகள்.. நடுவானில் ஒரு அதிர்ச்சி சம்பவம்!