Sports

"அவரின் வயதை பார்க்காதீர்".. கௌதம் கம்பீர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சுனில் கவாஸ்கர்!

2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் நடைபெறுகிறது. அந்தத் தொடருக்கான வாய்ப்புகள் பற்றி, இந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா சர்வதேச டி20 தொடர் தொடங்கும் முன்பு பேசியிருந்தார் கௌதம் கம்பீர். "தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் எடுக்கமாட்டார்கள் எனில், அவரை ஸ்குவாடில் வைத்திருப்பதில் அர்த்தமே இல்லை" என்று தினேஷ் கார்த்திக்கின் உலகக் கோப்பை வாய்ப்பு பற்றிக் கூறியிருந்தார் கம்பீர். ஆனால், அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார் கவாஸ்கர். இந்தியாவுக்குத் தேவையான ஆள் தினேஷ் கார்த்திக் தான் என்றும் கூறியிருக்கிறார் அவர். கவாஸ்கர், கம்பீரின் பெயரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், அவர் சொல்லியிருப்பது, கம்பீருக்கு பதில் கூறுவது போலத்தான் இருக்கிறது.

"அவர் பிளேயிங் லெவனில் விளையாடமாட்டார் எனில், அவருக்கு ஏன் அணியில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர் விளையாடமாட்டார் என்பதை அவர்கள் எப்படி முடிவு செய்கிறார்க்ள்? நீங்கள் ஒரு வீரரின் ஃபார்மை வைத்துத்தான் அவரை தேர்வு செய்ய முடியும். அவருடைய பெயரை வைத்தோ, பழைய பெருமைகள் வைத்தோ தேர்வு செய்யப்போவதில்லை" என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான நான்காவது சர்வதேச டி20 போட்டிக்குப் பிறகு இப்படிக் கூறியிருக்கிறார் அவர்.

ராஜ்கோட்டில் நடந்த அந்த நான்காவது டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தினார் தினேஷ் கார்த்திக். இந்திய வெற்றி பெற்றே ஆகவேண்டிய நெருக்கடியில் இருந்த இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் அவர். 200+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய அவர் 9 ஃபோர்களும், 2 சிக்ஸர்களும் விளாசினார். ஆறாவது பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கிய போது இந்திய அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருந்தது. 23 பந்துகளில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அப்போதுதான் கேப்டன் ரிசப் பண்ட் அவுட் ஆகியிருந்தார். 12.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. அடுத்த 7 ஓவர்களில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை 169 என்ற சிறப்பான ஸ்கோரை எட்ட உதவினர். 31 பந்துகள் சந்தித்த ஹர்திக் பாண்டியா, 46 ரன்கள் எடுத்தார்.

"தினேஷ் கார்த்திக் ஒன்றும் அதிக வாய்ப்புகள் பெறுவதில்லை. ஆறாவது அல்லது ஏழாவது வீரராகத்தான் பேட்டிங் செய்ய வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் நிறைய அரைசதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதிரடியாக விளையாடி ஒரு 20 பந்துகளில் 40 போண்ற ஸ்கோர்களை அவரால் எடுக்க முடியும். அதை அவர் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறார். அதை அவர் சீராக செய்துவருவதால், நிச்சயம் உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பில் அவர் நீடிக்கவே செய்கிறார்.

இந்தியா தடுமாறிய நேரத்தில் அவர் ஆடிய அந்த ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அது அவருடைய திறமையை, மன உறுதியை, தீர்க்கமான ஆட்டத்தை வெளிக்காட்டியது. இந்திய அணிக்காக மீண்டும் ஆடவேண்டும் என்று அவர் உறுதியாக இருக்கிறார். அதுதான் அவருடைய உத்வேகம் என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் விளையாடவேண்டும் என்று லட்சியத்தோடு அவர் இருக்கலாம். என்னவாக இருந்தாலும், அவரின் வயதைப் பற்றிப் பேசாதீர்கள், அவருடைய செயல்பாட்டைப் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

Also Read: "இந்த 5 பேரால் டெஸ்ட் தொடரே ஆபத்தை சந்தித்தது"- இந்திய வீரர்கள் மீது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகார்