Sports
“ஒரு தொடரின் அடிப்படையில் முடிவெடுக்கப்போவதில்லை..” : ரிசப் பண்ட் குறித்து மனம் திறந்த ராகுல் டிராவிட் !
சமீப காலமாக தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும் ரிசப் பண்ட்டின் டி20 உலகக் கோப்பை வாய்ப்பு சமீபத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் அவர் மிகவும் சுமாராக விளையாடியதால், அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என்று பலரும் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், ரிசப் பண்ட்டின் வாய்ப்புகள் பற்றி இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சர்வதேச டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் ரிசப் பண்ட். ஐந்தாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இந்தத் தொடர் 2-2 என முடிவுக்கு வந்தது.
இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த பண்ட், 105 என்ற மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த குறைவான ரன்களை விட ஒரே மாதிரியான பந்துகளுக்கு அவுட் ஆவதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"அவர் நிறைய ரன்கள் எடுக்கவேண்டும் என்றுதான் அவரும் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், அப்படி முடியாமல் போனது அவரை பாதிக்கவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு அவர் எங்கள் அணியின் மிகமுக்கிய அங்கமாக இருப்பார்" என்று கூறியிருக்கிறார் டிராவிட்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், இந்த ஒரு தொடரின் அடிப்படையில் பண்ட்டின் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பண்ட் போன்ற ஒரு வீரரின் அவசியத்தைப் பற்றியும் அவர் சொல்லியிருக்கிறார்.
"நான் பெரிதாக விமர்சிக்க விரும்பவில்லை. மிடில் ஓவர்களில் ஆட்டத்தை இன்னும் ஒரு கட்டம் மேலே எடுத்துச் செல்லும் வகையில் அதிரடியாக ஆடக் கூடிய வீரர்கள் அணிக்குத் தேவை. சிலசமயங்களில், இரண்டு அல்லது மூன்று போட்டிகளை வைத்து மட்டுமே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அது மிகவும் கடினமான விஷயம்" என்று கூறியிருக்கிறார் டிராவிட்.
ரிசப் பண்ட்டை ஆதரித்துப் பேசிய ராகுல் டிராவிட், ஐ.பி.எல் 2022 தொடரில், டெல்லி கேபிடலஸ் அணிக்காக 158 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் ரிசப் பண்ட் 340 ரன்கள் எடுத்ததை நினைவுகூர்ந்திருக்கிறார்.
"இந்த ஐ.பி.எல் 2022 தொடரின் ஸ்டிரைக் ரேட்டை கருத்தில் கொண்டால், அவருக்கு இது சிறந்த தொடராகவே அமைந்திருக்கிறது. சராசரியைக் கருத்தில் கொண்டால் வேண்டுமானால், அது அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஐபிஎல் தொடரில் அவரது சராசரியை அதிகரிக்க அவர் முயற்சி செய்தார். சொல்லப்போனால், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் சராசரி அந்த லெவலில் தான் இருந்தது.
அந்த சராசரியை சர்வதேச அளவிலும் அவரிடமிருந்து பெறுவும் என்று நம்புகிறோம். அட்டாகிங் கிரிக்கெட் விளையாடும்போது, சில நேரங்களில் அது தவறாகப் போய்விடும். ஆனால், அவர் எங்கள் பேட்டிங் லைன் அப்பில் மிகவும் முக்கியமானவர். அவருடைய பலம், அவர் இடது கை பேட்ஸ்மேன் போன்ற விஷயங்கள் அவரை அணியின் மிகவும் முக்கியமான அங்கமாக மாற்றியிருக்கிறது. சில சிறந்த இன்னிங்ஸ்களை அவர் விளையாடியிருக்கிறார்" என்று கூறினார் ராகுல் டிராவிட்.
Also Read
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!