Sports

ஒலிம்பிக்கிற்கு பிறகு வென்ற முதல் தங்கம்.. அடுத்தடுத்து அசத்தும் நீரஜ் சோப்ரா!

பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டியின் போது பெய்த மழைக் காரணமாக மைதானத்தில் ஈரமான சூழ்நிலைகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இந்த தொடரில், தனது முதல் முயற்சியிலேயே 86.69 மீ ட்டர் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதிப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. பின்னர் மூன்றாவது முறை ஈட்டி எறிந்தபோது, மைதானத்தில் நிலவிய ஈரத் தன்மையால் தடுமாறி கீழே விழுந்தார். எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தப்பித்தார்.

இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

முன்னதாக, சில தினங்கள் முன் பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை அந்தப் போட்டியில் முறியடித்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றிகள் என்னை காமன்வெல்த் விளையாட்டுக்கு உத்வேகமாக செயல்பட உதவும் என தங்கப் பதக்க வெற்றிக்கு பிறகு நீரஜ் சோப்ரா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஜூன் 30 ஆம் தேதி நடைபெற் உள்ள டயமண்ட் லீக்கின் ஸ்டாக்ஹோம் லெக்கில் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார் . இதிலும் தங்கம் வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ”IPL-க்காக இந்திய கால்பந்து நசுக்கப்படுகிறது”: கொதித்தெழும் இந்திய தலைமை பயிற்சியாளர்!