Sports
“இந்திய T-20 அணியில் ரிசப் பண்ட்டுக்கு இடம் இல்லை” : உண்மையை போட்டுடைத்த வாசிம் ஜாஃபர் !
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சர்வதேச டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தாலும், இந்திய டி20 அணியில் ரிசப் பண்ட்டுக்கு உறுதியான இடம் இல்லை என்று சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் வாசிம் ஜாஃபர். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இந்திய அணிக்குத் திரும்பிய பிறகு, ரிசப் பண்ட்டின் இடம் கேள்விக்குறியாகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜாஃபர்.
தென்னாப்பிரிக்க தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் காயத்தால் விலகியதால், இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் ரிசப் பண்ட். தன்னுடைய அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்காலும், விக்கெட் கீப்பிங்காலும் இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார் ரிசப் பண்ட். இருந்தாலும், தற்போது பல விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருடைய இடத்தைத் தக்கவைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று கூறியிருக்கிறார் ஜாஃபர்.
"கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து திரும்பியதும் நிச்சயமாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுவிடுவார். அவர் விக்கெட் கீப்பரும் கூட. தினேஷ் கார்த்திக் உறுதியாக விளையாடுவார் என்றால், அங்கும் ஒரு விக்கெட் கீப்பர் ஆப்ஷன் கிடைத்துவிடுகிறது. இப்படியிருக்கும் நிலையில், ரிசப் பண்ட் சமீபத்தில் விளையாடியதைப் பார்க்கும்போது அவர் இடம் அணியில் உறுதியானது என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியாது" என்று கூறியிருக்கிறார் வாசிம் ஜாஃபர்.
விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் விளையாடியதன் மூலம், அனைத்து ஃபார்மட்களிலும் இந்தியாவுக்கு 100 போட்டிகளை நிறைவு செய்தார் ரிசப் பண்ட். அவருடைய அதிரடி ஆட்டம் அதிகம் பேசப்பட்டாலும், டி20 போட்டிகளில் அவருடைய செயல்பாடு அவருடைய திறமையைப் பரைசாற்றுவதாய் இல்லை. சர்வதேச டி20 போட்டிகளில் அவரின் சராசரி வெறும் 23.32 தான். ஸ்டிரைக் ரேட் 125.95 என்று ஆச்சர்யப்படும் வகையில் குறைவாகவே இருக்கிறது.
2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மஹேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றதற்குப் பிறகு, அனைத்து வகையான போட்டிகளிலும் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் ரிசப் பண்ட். அவருடைய சர்வதேச டி20 போட்டிகளின் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், கடந்த சில ஐ.பி.எல் போட்டிகளின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டுப் பேசிய ஜாஃபர், அணியில் தன் இடத்துக்காக பண்ட் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும் என்று கூறினார். 2022 ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிசப் பண்ட், ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை.
"என்னைப் பொறுத்தவரை ரிசப் பண்ட் நிறைய ரன்கள் எடுக்கவேண்டும். அதையும் சீராக எடுக்கவேண்டும். அதை அவர் ஐ.பி.எல் தொடரிலும் செய்யவில்லை, சர்வதேச டி20 தொடர்களிலும் செய்யவில்லை. இதை நான் பல முறை சொல்லிவிட்டேன், டெஸ்ட் போட்டிகளிலோ, ஒருசில ஒருநாள் போட்டிகளிலோ விளையாடுவதுபோல் பண்ட் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இனி வரும் காலத்தில் டி20 கிரிக்கெட்டில் ரிசப் பண்ட்டின் இடம் உறுதியானது என்று நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருக்கிறார் வாசிம் ஜாஃபர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?