Sports

"ஆட்டத்தில் கன்சிஸ்டென்ஸி இல்லை".. இந்திய அணியின் இளம் வீரரை நினைத்து கவலைப்படும் கபில் தேவ்!

இந்திய இளம் வீரர்களின் திறமையைப் புகழ்ந்த இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், சஞ்சு சாம்சன் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். எப்போதுமே இந்திய இளம் வீரர்களின் திறமைகளைப் பாராட்டுபவர் கபில் தேவ். யார் எப்போது சிறப்பாக விளையாடினாலும் பாராட்டும், சில நேரங்களில் விமர்சனங்களையும் முன்வைக்கத் தவறமாட்டார். சாம்சன் எல்லையற்ற திறமைகள் கொண்டிருந்தாலும், அதை ஞாயப்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதில்லை என்று கூறியிருக்கிறார் கபில் தேவ்.

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது டி20 உலகக் கோப்பைத் தொடர். இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணியின் முன்பு பல கேள்விகள் இருக்கிறது. ஒவ்வொரு இடத்துக்கும் பல வீரர்கள் இருந்தாலும், விக்கெட் கீப்பர் இடத்துக்கு மிகப்பெரிய போட்டி இருக்கிறது. ரிசப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், தினேஷ் கார்த்திக் என ஏற்கெனவே 4 வீரர்கள் இந்த இடத்துக்கு இப்போதே போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு வீரர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது சாதாரண விஷயம் இல்லை என்றிருக்கிறார் கபில் தேவ். ஆனால், அவர்களுள் ஒருவர் மீது மட்டும் கபில் தேவ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனான கபில் தேவ், சஞ்சு சாம்சனின் திறமைகளை அவரின் நம்பர்கள் நியாயப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.

“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவர்களுள் ஒரேயொரு விக்கெட் கீப்பரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால், கார்த்திக், இஷன் கிஷன், சாம்சன் எல்லோருமே ஒரு லெவலில் தான் இருக்கிறார். அவர்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், பேட்டிங்கைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் மற்றவரை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட தினத்தில், அவர்கள் ஒவ்வொருவருமே இந்திய அணிக்கு போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்ககூடிய அளவு திறமை வார்ந்தவர்கள்.

சஹாவைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், மற்றவர்கள் எல்லோரையும் விட அவர் சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால், மற்றவர்கள் இவரை விட சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்களுள் சஞ்ச சாம்சனை நினைத்துத்தான் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். ஆனால், ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அடித்துவிட்டு மற்ற போட்டிகளில் ரன் எடுக்கத் தவறவிடுகிறார். அவரது ஆட்டத்தில் கன்சிஸ்டென்ஸி இல்லை” என்று கூறியிருக்கிறார் கபில் தேவ்.

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பல முறை பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றை அவரால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால், அவரால் எளிதாக இப்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்திய அணிக்காக 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் சஞ்சு சாம்சன் 174 ரன்கள் எடுத்திருக்கிறார். இதுவரை அவர் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், முறையே 484 மற்றும் 458 ரன்கள் எடுத்தார். 2022 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திச் சென்றவருக்கு, தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Also Read: இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்.. அப்போ ராகுல் டிராவிட்?