Sports
T20 உலக கோப்பை.. "இவர் அணியில் இல்லை என்றால் அதிர்ச்சியாக இருக்கும்”: இந்திய வீரருக்கு பாண்டிங் ஆதரவு!
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டது. 37 வயதான தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் 2022 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார் தினேஷ் கார்த்திக். அவருடைய அட்டகாசமான ஃபினிஷிங் ரோல் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் விளைவாக இந்திய தேசிய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் டி.கே. இருந்தாலும், 2022 டி.20 உலகக் கோப்பைக்கான இந்திய தேசிய அணியில் அவர் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்தவண்ணமே இருக்கிறது. அதைப் பற்றிய தன் கருத்தைக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்.
ஐ.பி.எல் 2022 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 330 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் 183+ ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவரது அட்டகாசமான ஆட்டம், தொடர்ந்து இரண்டாவது சீசனாக பிளே ஆஃப் சுற்றுக்குள் ஆர்சிபியை அழைத்துச் சென்றது. அப்போதே அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவேண்டும் என்ற பேச்சு வலுக்க ஆரம்பித்தது.
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஈஷா குஹாவிடம் இதுபற்றிப் பேசிய ரிக்கி பான்டிங், தினேஷ் கார்த்திக் இடம்பெறவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் இடம்பெறாமல் போனால் அதுதான் தனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் பான்டிங்.
“நானாக இருந்தால் நிச்சயம் என் அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுப்பேன். ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்டிங் ஸ்லாட்டில் அவரை ஆடவைப்பேன். ஆர்.சி.பி அணிக்காக அவர் இந்த சீசன் போட்டிகளை முடித்த விதத்தைப் பார்த்தபோது, அவர் தன் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார் என்பது புரிகிறது” என்று கூறியிருக்கிறார் பான்டிங்.
“ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரை உங்களின் சிறந்த வீரர்கள் உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள், சில சமயங்களில் நான்கு போட்டிகள் வரை கூட வெற்றி பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு அணிக்கு அது கிடைத்துவிட்டால் அது நிச்சயம் மிகச் சிறந்த சீசனாக அமையும். ஆனால், மற்ற ஆர்.சி.பி வீரர்களை விடவும் இந்த சீசனில் அதிக தாக்கம் ஏற்படுத்திய பேட்ஸ்மேன் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான்”
“விராட் கோலியின் சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கிளென் மேக்ஸ்வெல் சிறப்பாக சீசனைத் தொடங்கினாலும், போகப் போக அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தினேஷ் கார்த்திக் தான் இந்த சீசனை சிறப்பாக மாற்றியிருக்கிறார். எனக்குத் தெரிந்து, அவரைத் தவிர்த்து ஆர்.சி.பி பேட்டிங்கை ஓரளவு தூக்கி சுமந்தது ஃபாஃப் டுப்ளெஸ்ஸி தான் என்று நினைக்கிறேன். அவர் இந்திய அணியில் இல்லையெனில் நிச்சயம் எனக்கு அது அதிர்ச்சியாகவே இருக்கும்” என்று கூறியிருக்கிறார் பான்டிங்.
தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக சர்வதேச டி20 தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி.20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக டி.20 தொடர்களில் விளையாடுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!