Sports

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ‘ஒலிம்பியாட் தீபம்’ - தமிழ்நாட்டிற்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்!

சென்னையில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து ஒலிம்பியாட் தீபத்தை அறிமுகப்படுத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் Arkady Dvorkovich மற்றும் ஒலிம்பியாட் தொடரின் இயக்குநர் பரத் சிங் சௌகான் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் கடைபிடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்றான ஒலிம்பிக் தீபத்தைப்போல் செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அறிமுகப்படுத்தவுள்ளனர். ஒலிம்பியாட் தீபமானது செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

செஸ் விளையாட்டின் ஆதி இந்தியா என நம்பப்படுவதால் இந்தியாவில் நடைபெறும் தொடரிலிருந்து இந்த தீபம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரும் காலங்களில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தீபம் பாரம்பரியமான ஏதன்சில் ஏற்றப்படுவது போல் நடப்பாண்டு மற்றும் இனி நடைபெறும் அனைத்து ஒலிம்பியாட் தொடர்களுக்கும் இந்தியாவில் தான் தீபம் ஏற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீபம் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர். 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கடந்த ஆண்டு 3-வது இடம்.. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, உணவு பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் !