Sports
முதல் ஓவரிலேயே 21 ரன்கள்.. தோனி வைத்த நம்பிக்கையால் இன்று.. அறிமுக போட்டியை நினைவு கூர்ந்த இளம் வீரர்!
இந்திய அணியில் தற்போது இருக்கும் பல நட்சத்திரங்கள் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருக்கும்போது அணிக்குள் வந்தவர்கள். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின்… இவர்கள் ஒவ்வொருவருமே தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார்கள். அறிமுகம் ஆன பிறகு சர்வதேச அரங்கில் இவர்கள் ஒவ்வொருவருமே முத்திரை பதித்திருக்கிறார்கள். கோலியும், ரோஹித்தும் சர்வதேச அரங்கில் சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களாக வலம் வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஸ்பின்னராக உருவெடுத்திருக்கிறார் அஷ்வின். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு நிகரான ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா!
2016ம் ஆண்டு நம்பிக்கை தரக்கூடிய இன்னொரு ஆல் ரவுண்டர் தோனியின் தலைமையில் இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார். மற்றவர்களைப் போல் அவரும் சர்வதேச அரங்கில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். சில காலம் இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்திருக்கிறார். பேட்டிங், பௌலிங்கில் மட்டும் கலக்காமல், கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கள் முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வெல்வதற்குக் காரணமாக விளங்கினார்.
தான் இந்திய அணிக்கு அறிமுகம் ஆனதை நினைவு கூர்ந்த ஹர்திக், தோனியிடம் இருந்து பெற்ற ஆதரவைப் பற்றிக் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பந்துவீசிய ஹர்திக், தன்னுடைய முதல் ஓவரிலேயே 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வேறு கேப்டனாக இருந்திருந்தால், நிச்சயம் அந்த பௌலருக்கு இன்னொரு ஓவர் கொடுக்க தயங்கியிருப்பார்கள். ஆனால், தோனி தயங்கவில்லை. மீண்டும் அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்தார் தோனி. அந்தப் போட்டியை 3-0-27-2 என முடித்து தன் கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் ஹர்திக்.
“நான் இந்திய அணியில் இணைந்தபோது, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவ்ராஜ் சிங், எம்.எஸ்.தோனி, விராட் கொலி, ஆஷிஷ் நெஹ்ரா என நான் பார்த்து வளர்ந்த வீரர்கள் பலரையும் பார்த்தேன். நான் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பே அவர்கள் நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள். அப்படியிருக்கையில், நான் அவர்களோடு இணைந்தது எனக்கு மிகப்பெரிய விஷயம். எனக்குத் தெரிந்து சர்வதேச கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே 21 ரன்கள் விட்டுக்கொடுத்த கிரிக்கெட்டர் நானாகத்தான் இருப்பேன். சரி அவ்வளவுதான், இதுதான் நாம் வீசிய கடைசி ஓவர் என்று நினைத்திருந்தேன். ஆனால், தோனி போன்ற ஒரு கேப்டனுக்குக் கீழ் விளையாடும் அதிர்ஷ்டத்தையும் பாக்கியத்தையும் நான் பெற்றிருந்தேன். அவர் என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் இந்த நிலைக்கு உயர்வதற்கு மிகப்பெரிய உதவி புரிந்திருக்கிறார்” என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.
அந்த முதல் மூன்று போட்டிகளில் ஹர்திக் பேட்டிங் செய்யவில்லை. இருந்தாலும், சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதிகம் விளையாடவில்லை என்றாலும், ஹர்திக்கின் திறமையை வியந்த கேப்டன் தோனி, சில மாதங்களில் தொடங்கவிருந்த உலகக் கோப்பை அணியில் ஹர்திக் இடம்பெறுவார் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்.
“நான் வெறும் 3 போட்டிகளே ஆடியிருந்த நிலையில், தோனி என்னிடம் வந்து நான் நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இருப்பேன் என்று கூறினார். ஒரு உலகக் கோப்பையில் விளையாடுவதைப் பற்றி என்னுடைய மூன்றாவது போட்டியிலேயே நான் தெரிந்துகொண்டேன். அந்தப் போட்டியில் நான் பேட்டிங்கே செயவில்லை என்றாலும், என் உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து உத்திரவாதம் அளித்தார் தோனி. அது எனக்கு கனவு நனவான தருணம்” என்றும் கூறினார் ஹர்திக்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?