Sports
”IPL தொடரில் கேப்டனாக வேண்டும்”.. தென்னாப்பிரிக்க T20 கேப்டனின் ஆசை!
2022 ஐ.பி.எல் தொடரில் பல தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கெடுத்திருந்தார்கள். அதில் ஒருசில வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் தொடரை விட ஐ.பி.எல் தொடரை பிரதானப்படுத்தி இங்கே வந்து விளையாடினர். இது தென்னாப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் டீன் எல்கருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் தொடரைப் புறக்கணித்து வீரர்கள் மீது அதிருப்தி தெரிவித்திருக்கும் எல்கர், அந்த வீரர்கள் இனி டெஸ்ட் அணிக்குத் திரும்புவதே கடினம் தான் என்று கூறியிருக்கிறார்.
மறுபக்கம், தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க வீரர்களின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஐ.பி.எல் தொடரில் தான் விளையாடவும், ஒரு ஐ.பி.எல் அணியை வழிநடத்தவும் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார் பவுமா. 32 வயதான பவுமா, இதுவரை ஐ.பி.எல் தொடரில் விளையாடியதில்லை.
“ஐபிஎல் தொடரில் விளையாட நான் ஆவலாக இருக்கிறேன். என் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். அதுமட்டுமல்லாமல், ஒரு ஐ.பி.எல் அணியை வழிநடத்தவேண்டும் என்ற ஆசையும் எனக்குள் தோன்றிவிட்டது. எங்கிருந்து அந்த எண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால், வந்துவிட்டது. அதை அனுபவித்துப் பார்க்க நான் விரும்புகிறேன். ஆனால், ஒரு அணியை வழிநடத்துவதற்கு முன், ஒரு அணியில் இடம்பெறவேண்டுமே!” என்று கூறியிருக்கிறார் டெம்பா பவுமா.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக், இந்த ஐ.பி.எல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். அதேபோல், பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு அதிமுக்கியக் காரணமாக விளங்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடிய ககிஸோ ரபாடாவோ அதிவேகமாக 100 ஐ.பி.எல் விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சன் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்தனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பட்டையைக் கிளப்பி மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு பெற்ற டிவால்ட் பிரெவிஸ், தன் தைரியமான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
“நான் இதில் முழு கவனத்தையும் செலுத்தவில்லை. இருந்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது சிறப்பாக இருக்கிறது. மலிங்காவை விட அதிவிரைவாக 100 ஐ.பி.எல் விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறார் ரபாடா. இது பெருமைப்படவேண்டிய விஷயம். மார்க்ரம், யான்சன், இளம் வீரர்கள் டிவால்ட் பிரெவிஸ், திரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்றவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது. அந்த இளம் வீரர்களின் செயல்பாடு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது” என்று கூறினார் பவுமா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!