Sports
”வேகம் மட்டும் உதவாது.. இதுவும் வேண்டும்”.. மறைமுகமாக IPL வீரர்களை சாடிய பாகிஸ்தான் இளம் வீரர்!
வளர்ந்து வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கும், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாகி ஃபெர்குசன் ஆகியோர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் தங்கள் அதிவேகப் பந்துவீச்சாள் மிரட்டினார்கள். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலான பந்துகளை இருவரும் பலமுறை வீசினார்கள். 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி, அந்த சீசனி அதிவேக பந்தை வீசியிருந்தார் உம்ரான் மாலிக். ஆனால், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் 157.3 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசி அச்சாதனையை உடைத்தார். ஆனால், இது பற்றி பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி கூறியிருக்கும் கருத்து மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது.
2021ம் ஆண்டு ஐசிசி சிறந்த வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்ற ஷஹீன் அப்ரிடி, பந்தை ஸ்விங் செய்ய முடியாதபட்சத்தில் வேகம் எந்த விதத்திலும் உதவி புரியாது என்று கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட லாகி ஃபெர்குசன், உம்ரான் மாலிக் ஆகியோர் பற்றிக் கேட்டதற்கு “லைன், லென்த், ஸ்விங் போன்றவை இல்லாத பட்சத்தில் வேகம் உங்களுக்கு உதவாது” என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.
தொடங்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிக் கூறியிருக்கிறார் அப்ரிடி. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்தத் தொடர் கடந்த டிசம்பர் மாதமே நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டதால் அது தள்ளிப் போனது. இப்போது முதல் ஒருநாள் போட்டி ஜூன் 8ம் தேதி தொடங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளுமே முல்தான் மைதானத்தில் நடைபெறுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரண் தலைமையில் களம் காண்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக பாகிஸ்தான் விளையாடிய ஒருநாள் தொடரில், ஷஹீன் அப்ரிடி மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். தன்னுடைய ஸ்விங்கால் ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளிலும் அப்ரிடி தன் அபார பந்துவீச்சைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், தட்பவெட்பநிலை பௌலர்களுக்குப் பாதகமாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.
“வெப்பம் தற்போது மிகவும் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும், நல்ல கிரிக்கெட் போட்டியை ஆட காத்திருக்கிறோம். கோடை காலத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய ஸ்பெல்கள் வீசுவது கடினமான ஒன்று. இருந்தாலும், தொழில்முறை வீரர்களான நாங்கள் அந்த சவாலை எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம்” என்றும் கூறியிருக்கிறார் அப்ரிடி.
வெஸ்ட் இண்டீஸை மிகவும் பலமான அணி என்று குறிப்பிட்டிருக்கும் அப்ரிடி, இந்தத் தொடரை வென்று உலக சாம்பியன்ஷிப் புள்ளிகளை வெல்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். “உலக கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. அதனால், ஒரு போட்டியில் கூட தோற்றுவிடக் கூடாது என்று தீர்க்கமாக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலமான அணி. அவர்கள் ஒன்றும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களை அனுப்பவில்லையே” என்று பேசியிருக்கிறார் ஷஹீன் ஷா அப்ரிடி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!