Sports

விதிமுறைகளை மீறிய தினேஷ் கார்த்திக்.. தண்டனை என்ன? - IPL நிர்வாகம் கூறுவது என்ன?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் விதிமுறைகளை மீறியிருப்பதாக பி.சி.சி.ஐ குற்றம்சாட்டியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரு அணி லக்னோ அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் ஆடியிருந்தது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு தினேஷ் கார்த்திக்கும் முக்கிய பங்காற்றியிருந்தார். கடைசிக்கட்டத்தில் ரஜத் பட்டிதருடன் இணைந்து அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 37 ரன்களை எடுத்திருந்தார்.

பெங்களூரு வெற்றிபெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய இந்த போட்டியில்தான் தினேஷ் கார்த்திக் விதிகளை மீறியதாக பி.சி.சி.ஐ கூறியிருக்கிறது. ஈடன் கார்டனில் நடந்த இந்த போட்டியில் ஐ.பி.எல் சட்டதிட்டத்தின்படி Article 2.3 ஐ தினேஷ் கார்த்திக் மீறியிருப்பதாகவும் இது Level 1 குற்றமாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விதிகளை மீறினார் என மட்டுமே பி.சி.சி.ஐ கூறியிருக்கிறதே தவிர, எந்த சம்பவத்தையும் பிசிசிஐ குறிப்பிடவில்லை. அதனால் தினேஷ் கார்த்திக் எந்த சம்பவத்திற்காக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.

மேலும், இந்த விதிமீறலுக்கான தண்டனையை சட்டதிட்டங்களின்படி களநடுவரே வழங்குவார் என்றும் அவரின் முடிவை இறுதியானது என்றும் கூறப்படுகிறது.

பி.சி.சி.ஐ தினேஷ் கார்த்திக்கின் மீதான குற்றச்சாட்டிற்கு காரணத்தை கூறவில்லையெனினும், உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். அந்த போட்டியில் பெங்களூரு பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் ஆவேஷ் கான் பந்து வீசிய போது ஒரு பந்தை தினேஷ் கார்த்திக் அடிக்கமுடியாமல் விட்டிருப்பார்.

அந்த பந்தை தவறவிட்ட ஆத்திரத்தில் கொஞ்சன் உரக்க கத்தி தன் மீதே அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பார். இதற்காக கூட தினேஷ் கார்த்திக் விதிகளை மீறினார் என அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுமா அல்லது அதற்கும் மேலும் எதாவது செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் பெயர் பொறிக்கப்படும்” : இளம் வீரருக்கு Certificate கொடுக்கும் சேவாக்!