Sports
IPL 2022: இரண்டு இடங்களுக்கு மூன்று போட்டியாளர்கள்; பரபரக்கும் Playoff ரேஸ்; வெல்லப்போவது யார்?
ஐ.பி.எல் 2022 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸூம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூம் ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு மூன்று அணிகள் இப்போது போட்டியில் இருக்கின்றன. அந்த இரண்டு இடங்களை வெல்லப்போவது யார்?
குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் வென்றிருக்கிறது. முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸூக்கும் தகுதிப்பெற்றுவிட்டது. புள்ளிப்பட்டியலில் முதல் இடம் அந்த அணிக்குத்தான். இதனால் ப்ளே ஆஃப்ஸில் அந்த அணிக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
இரண்டாம் இடத்தில் இப்போதைக்கு லக்னோ அணி இருக்கிறது. அந்த அணி 14 போட்டிகளில் ஆடி 9 போட்டிகளில் வென்றிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிட்டாலும் இரண்டாம் இடம் அந்த அணிக்கு இன்னமும் உறுதியாகவில்லை.
ப்ளே ஆஃப்ஸில் இருக்கும் நான்கு இடங்களுக்கு இரண்டு அணிகள் உறுதியாகிவிட்டன. மீதமிருக்கும் இரண்டு இடங்கள் யாருக்கு? இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் என மூன்று அணிகள் இருக்கின்றன.
70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 66 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. மீதமிருக்கும் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் மேற்குறிப்பிட்ட இந்த மூன்று அணிகளுமே மோதுகின்றன. டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளை ஒப்பிடும்போது ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. டெல்லியும் பெங்களூருவும் 13 போட்டிகளில் 7 போட்டிகளை மட்டுமே வென்றிருக்க, ராஜஸ்தானோ 13 போட்டிகளில் 8 போட்டிகளை வென்றிருக்கிறது. மேலும், டெல்லி மற்றும் பெங்களூருவை விடவும் ராஜஸ்தானின் ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது.
ராஜஸ்தான் அணி நாளை சென்னை அணியை எதிர்கொள்கிறது. சென்னனை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த போட்டியை ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் 9 போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடும். அதுமட்டுமல்லாமல் இதே ரன்ரேட் மெயிண்டெயின் செய்யப்படும்பட்சத்தில் லக்னோவை இரண்டாம் இடத்திலிருந்து இறக்கிவிட்டு ராஜஸ்தான் இரண்டாம் இடத்தை பிடிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை ராஜஸ்தான் தோற்றாலுமே ரன்ரேட்டில் பெரிதாக அடி வாங்காமல் இருந்தால் மூன்று அல்லது நான்காவது இடத்தை உறுதியாக பிடித்துவிடும்.
டெல்லி மற்றும் பெங்களூரு இடையேத்தான் கடும்போட்டி நிலவக்கூடும். இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் குஜராத்தை பெங்களூரு எதிர்கொள்கிறது. இந்த போட்டியை பெங்களூரு வென்றே ஆக வேண்டும். அதுமட்டுமில்லை, ரன்ரேட்டை பல மடங்கு உயர்த்தும் வகையில் வெல்ல வேண்டும். ஏனெனில், டெல்லி மற்றும் குஜராத்தின் ரன்ரேட்டெல்லாம் ப்ளஸ்ஸில் இருக்க பெங்களூருவின் ரன்ரேட் மட்டும்தான் மைனஸில் இருக்கிறது. ஆக, ஒரு மிகப்பெரிய வெற்றியை பெங்களூரு இன்று பெற்றே ஆக வேண்டும். தோற்றால் பெங்களூருவிற்கான வாய்ப்பு ரொம்பவே குறைந்துப்போகும்.
நாளை மறுநாள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பையுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டெல்லி வென்றே ஆக வேண்டும். ரன்ரேட் ஏற்கனவே நன்றாக இருப்பதால் இதில் சேதாரம் ஏற்படாமல் நல்ல வெற்றியை பெற்றாலே போதும். ஒருவேளை இந்த போட்டியில் டெல்லி தோற்கும்பட்சத்தில், பெங்களூருவும் குஜராத்துடன் தோற்கும்பட்சத்தில் இரண்டு அணிகளின் ரன்ரேட் அடிப்படையில் அதிக ரன்ரேட் வைத்திருக்கும் அணி ப்ளே ஆஃப்ஸூக்கு செல்லும். அந்த அணி டெல்லியாக இருப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னையுடன் தோற்று, டெல்லியும் பெங்களூருவும் தங்களின் கடைசி போட்டிகளை வென்றால் மூன்று அணிகளும் ஒரே புள்ளியில் இருக்கும். இப்போதும் ரன்ரேட் அடிப்படையிலேயே முடிவு எட்டப்படும். மூன்று அணிகளில் ரன்ரேட் அதிகமுள்ள இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறும்.
வரப்போகும் மூன்று போட்டிகளும் ரொம்பவே பரபரப்பாக அமையப்போகிறது. அணிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதாக அமையப்போகிறது. உச்சபட்ச சுவாரஸ்யம் காத்திருக்கிறது. தவறவிட்டுவிடாதீர்கள்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?