Sports

இது 2020 அல்ல.. அதைவிட மோசம் - பரிதாபமாக தோற்கும் CSK! ஏன் இந்த சோகம் ?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கெதிரான போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இந்த போட்டியை குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. சென்னை அணி ரொம்பவே மந்தமாக பேட்டிங் ஆடியதே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. டெத் ஓவர்களில் பவுண்டரியே அடிக்காமல் சொதப்பி தள்ளினர்.

குஜராத்துக்கு எதிராக சென்னை அடைந்த இந்த தோல்வி இந்த சீசனில் அந்த அணியின் 9 வது தோல்வியாகும். 13 போட்டிகளில் ஆடியிருக்கும் சென்னை அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே 2020 சீசன்தான் சென்னை அணியின் மிக மோசமான சீசனாக இதுவரை இருந்தது. அந்த சீசனில் சென்னை அணி முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸூக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறியிருக்கும். அந்த சீசனில் சென்னை அணி 14 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வென்றிருக்கும்.

அந்த சீசனை முறியடிக்கும் வகையில் இந்த சீசனில் சென்னை ஆடியிருக்கிறது. இன்னும் ஒரு போட்டி சென்னை அணிக்கு இருக்கிறது. அந்த ஒரு போட்டியை சென்னை வென்றாலும் 5 போட்டிகளில் வென்றதாகத்தான் கணக்கு வரும். ஆக, 2020 சீசனை விட 2022 சீசன் சென்னை அணிக்கு ரொம்பவே சுமாராகவே அமைந்திருக்கிறது. மேலும், ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை அணியின் மோசமான சீசன் என்கிற தலைகுனிவான பெருமையையும் இந்த சீசன் பெற்றிருக்கிறது. அந்த 2020 சீசன் தொடக்கத்தில் ஏமாற்றமாக இருந்தாலும் இறுதியில் சென்னை அணி 3 போட்டிகளை தொடர்ந்து வென்று மிகச்சிறந்த முறையில் நேர்மறையாக அந்த சீசனை முடித்திருக்கும். ஆனால், இந்த சீசன் தோல்வியோடு தொடங்கி தோல்வியுடனே முடியப்போவதாகவே தெரிகிறது.

இந்த சீசனின் புள்ளிப்பட்டியலில் 10 வது மற்றும் கடைசி இடம் மும்பைக்குத்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதைய சூழலை வைத்து பார்த்தால் சீசன் முடியும் போது அந்த 10 வது இடத்தில் சென்னை இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

'அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஒரு அணியை உருவாக்க வேண்டும். தொடக்கத்தில் ஒரு அணியை வைத்திருந்தோம். அது இத்தனை வருடமாக பயனளித்தது. இனி அடுத்த தலைமுறையை கொண்ட ஒரு அணியை உருவாக்கித்தான் ஆக வேண்டும்.' 2020 சீசன் தோல்விக்கு பிறகு தோனி இப்படி பேசியிருந்தார். ஆனால், அவர் பேசியதை போலவே அணி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு கை மாற்றி விடப்படவே இல்லை.

கேப்டன் பதவியிலிருந்து விலகி ஜடேஜாவை கேப்டன் ஆக்கினார். ஜடேஜா இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கக்கூடிய அடுத்த தலைமுறை வீரர். ஆனால், ஒரு சில போட்டிகளிலேயே அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகி தோனியே மீண்டும் கேப்டன் ஆனார். தோனி சொன்ன விஷயத்தை அவரை சட்டை செய்து கொள்ளவில்லை.

எப்போது ஓய்வை அறிவிக்கலாம் என துடித்துக் கொண்டிருக்கும் அம்பத்தி ராயுடு, ப்ராவோ, உத்தப்பா போன்ற வீரர்களை மெகா ஏலத்தில் எடுத்து மீண்டும் மீண்டும் அதே பழைய வீரர்களின் கையிலேயே அணியை உழலவிட்டால் அடுத்த தலைமுறை வீரர்கள் எப்படி தலைதூக்க முடியும்?

2020 தோல்வியின் போது தோனி பேசிய அந்த விஷயம் இந்த தோல்வியின் போது அவருக்கு மீண்டும் ஞாபகம் வந்து நல்ல முடிவுகளை எடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: தாமஸ் கோப்பை வெற்றி.. 73 ஆண்டுகால ஏக்கத்தை இந்தியா தீர்த்தது எப்படி?