Sports
தாமஸ் கோப்பை வெற்றி.. 73 ஆண்டுகால ஏக்கத்தை இந்தியா தீர்த்தது எப்படி?
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை இந்திய அணி முதன் முறையாக வென்றிருக்கிறது. அதுவும் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை வீழ்த்தி வென்றிருக்கிறது. இந்திய விளையாட்டுத்துறையின் மிக முக்கிய சாதனை இது.
இந்த தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி சீன தைபேக்கு எதிரான ஆட்டத்தை மட்டுமே தோற்றிருந்தது. ஆயினும் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் 5 முறை சாம்பியனான மலேசியாவையும் அரையிறுதியில் 2016 இல் சாம்பியனான டென்மார்க்கையும் என இரண்டு வலுவான அணிகளை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இப்படித்தான் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தோனேஷியாவிற்கு இறுதிப்போட்டியெல்லாம் புதிதில்லை. ஏற்கனவே 14 முறை சாம்பியன் ஆகியிருக்கிறார்கள். நடப்பு சாம்பியனும் அவர்களே. இந்த தொடரிலும் ஒரு போட்டியை கூட இழக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறிவிட்டனர்.
இப்படியான முழுமையான ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு அணியை இந்திய அணி ஒரு ஆட்டத்தை கூட வெல்லவிடாமல் 3-0 என தோற்கடித்திருக்கிறது. இதுதான் இந்த வெற்றியை மேலும் மேலும் கொண்டாடத்தக்கதாக மாற்றுகிறது.
முதல் ஆட்டத்திலேயே இந்தியாவின் லக்சயா சென்னும் இந்தோனேஷியாவின் கிந்திங்கும் மோதியிருந்தனர். லக்சயா சென் நம்பிக்கைக்குரிய இளம் வீரர் ஆகினும் இந்த தொடரில் சொதப்பலாகவே ஆடியிருந்தார். சீன தைபே, மலேசியா, டென்மார்க் என இந்த தொடரில் இதற்கு முன் ஆடிய மூன்று போட்டிகளிலுமே தோற்றிருந்தார். இங்கேயுமே கிந்திங்கிடம் முதல் செட்டில் 8-21 என தோற்றார். ஆனால், இந்த தோல்விக்கு பிறகு லக்சயா சென் எதிர்பாராதவிதமாக கம்பேக் கொடுத்தார். அடுத்த இரண்டு செட்களையுமே வென்று இந்திய அணியை 1-0 என முன்னிலையையும் அடைய செய்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் இணையும் இந்தோனேஷியாவின் அசான் - கெஃபின் இணையும் மோதின. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி முதல் செட்டை தோற்றிருந்தது. ஆனால், இரண்டாவது செட்டில் இவர்களும் கம்பேக் கொடுத்தனர். இந்த போட்டியிலேயே மிகவும் பரபரப்பாக சென்றது இந்த ஆட்டம்தான். 23-21 என கடைசி வரை இரு அணிகளும் முட்டி மோதியே இந்தியா வென்றிருந்தது. 14-19 என பெரிதாக பின்தங்கிப்போய் இந்திய அணி மீண்டு வந்து 23-21 என வென்றது. அடுத்த செட்டையும் இந்த கூட்டணி வென்று கொடுக்க முதல் இரண்டு ஆட்டங்களையுமே வென்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இன்னும் ஒரே ஒரு ஆட்டத்தை வென்றால் வரலாறு படைத்துவிடலாம் என்ற சூழலில், அந்த ஆட்டத்தை வென்று கொடுக்க இந்தியா சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வந்தார். போட்டியில் நீடிக்க வேண்டுமெனில் இந்த ஆட்டத்தை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தோனேஷியாவின் கிறிஸ்ட்டி வந்தார். 14 முறை சாம்பியனான அணி இந்த ஆட்டத்தை வென்று கொஞ்சமேனும் சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவே இல்லை. கிறிஸ்ட்டி எவ்வளவோ போராடியும் ஸ்ரீகாந்தை மிஞ்ச முடியவில்லை. முதல் இரண்டு செட்களையுமே வென்று ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக முடித்து வைத்தார். 3-0 என இந்த இறுதிப்போட்டியை இந்தியா வென்றது.
1949 முதல் 73 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அந்த முதல் முயற்சியிலேயே இந்தோனேஷியா மாதிரியான வலுவான அணியை வீழ்த்தி தொடரை வென்றிருக்கிறது. இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் இது ஒரு மிகமுக்கிய உச்சபட்ச தருணம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!