Sports
#IPL2022 பஞ்சாபை தூக்கி நிறுத்திய பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் : பெங்களூருவின் தோல்விக்கான காரணம் என்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றிருக்கிறது. பெங்களூரு அணி கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் தோற்று நிற்கிறது. பெங்களூருவின் தோல்விக்கான காரணம் என்ன?
பெங்களூரு அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் மோசமான பந்துவீச்சே. குறிப்பாக, ஒரு 6 ஓவர்களில் மனசாட்சியேயின்றி ரன்களை வாரி வழங்கியிருந்தனர். பஞ்சாப் அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்களில் 209 ரன்களை எடுத்திருந்தது. ஓப்பனராக இறங்கியிருந்த பேர்ஸ்ட்டோவும் மிடில் ஆர்டரில் இறங்கிய லிவிங்ஸ்டனும் அதிரடியாக அரைசதம் அடித்து பஞ்சாபை தூக்கி நிறுத்தியிருந்தனர். சேஸ் செய்த பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 155 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து இத்தனை பெரிய ஸ்கோரை எடுக்க மிக முக்கிய காரணமாக அமைந்தது அந்த குறிப்பிட்ட 6 ஓவர்களே. ஹேசல்வுட்டும் சிராஜூம் வீசிய இந்த 6 ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 100 ரன்களை சேர்த்திருந்தது. மீதமிருந்த 14 ஓவர்களில் 109 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அந்த 6 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ரன்ரேட் 16.6 மீதமிருந்த 14 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ரன்ரேட் 7.7 மட்டும்தான்.
ஆக, ஹேசல்வுட்டும் சிராஜூம் கொஞ்சம் சிக்கனமாக ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்திருந்தால் கூட பஞ்சாப் அணி 170 ரன்களை சுற்றித்தான் எடுத்திருக்கும். பெங்களூருவுக்கான வெற்றி வாய்ப்பும் கூடியிருக்கும்.
ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 64 ரன்களையும் சிராஜ் 2 ஓவர்களை வீசி 36 ரன்களையும் கொடுத்திருந்தனர். சிராஜ் இந்த சீசன் முழுவதும் தடுமாற்றமாகத்தான் செயல்படுகிறார். அதனால் அவர் சுமாராக வீசியதில் ஆச்சர்யமில்லை. ஆனால், ஹேசல்வுட் மிகச்சிறப்பாக மேட்ச் வின்னிங் ஸ்பெல்களை வீசி வந்தார். பெங்களூருவின் அபாயகரமான பௌலராக இருந்தார். அவர் இப்படி ஓவருக்கு 16 ரன்களை கொடுத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இந்த சீசனில் ஹேசல்வுட்டின் சுமாரான பெர்ஃபார்மென்ஸ் எதுவென்றால் குஜராத்துக்கு எதிரான போட்டியை சொல்லலாம். அந்த போட்டியில் 3.3 ஓவர்களில் 36 ரன்களை கொடுத்து விக்கெட்டையே எடுக்காமல் இருந்தார். அதைவிடவெல்லாம் மோசமான ஸ்பெல்லாக நேற்றையது அமைந்திருந்தது.
பவர்ப்ளேயில் பேர்ஸ்ட்டோவும் டெத் ஓவரில் லிவிங்ஸ்டனும் ஹேசல்வுட்டை வைத்து பிறுத்தெடுத்திருந்தனர். பவர்ப்ளேயில் வீசிய முதல் ஓவரிலேயே 22 ரன்களை கொடுத்திருந்தார். ஹேசல்வுட் பவர்ப்ளேயில் எப்போதும் சிறப்பாக வீசக்கூடியவர். டெஸ்ட் மேட்ச் லைன் லெந்த்தை பிடித்துக் கொண்டு ஒரு புள்ளியில் பிட்ச்சாக்கி செட் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து விக்கெட்டை தூக்குவார். ஆனால், இந்த போட்டியில் பேர்ஸ்ட்டோ ஹேசல்வுட் செட் செய்வதற்கான நேரத்தையே கொடுக்கவில்லை. எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சராக்கினார். அடுத்து ஒரு டாட். அடுத்து ஒரு சிக்சர். தொடக்கத்திலேயே பேர்ஸ்ட்டோ அட்டாக் செய்ததால் தனது பலமான குட் லெந்த் டெலிவரிக்களை வீசுவதை ஹேசல்வுட் தவிர்த்தார். ஃபுல் லெந்த்தில் வீச முயற்சித்து ஸ்லாட்டில் வீசி தொடர்ந்து அடி வாங்கினார். தன்னுடைய பலத்திற்கு வீசாமல் பேட்ஸ்மேனால் சிதறடிக்கப்பட்டு பேட்ஸ்மேன் விரும்பிய லெந்தில் வீசி சொதப்பினார்.
முதல் ஓவரில் தொடங்கிய சறுக்கலிலிருந்து கடைசி ஓவர் வரைக்குமே அவரால் மீள முடியவில்லை. ஆனால், கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடிக்கு வந்துவிட்ட நிலையில் பெரிதாக நம்பப்படும் முக்கியமான வீரர் மொத்தமாக சொதப்பி தோற்பது சோகம்தான்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!