Sports
ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை அணி - மோசமான தோல்விக்கு காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த தோல்வி மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது.
சென்னை அணிக்கு இது கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி. ஆனால், சென்னை வீரர்கள் அந்த பொறுப்புணர்வோடு ஆடியதாகவே தெரியவில்லை. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 97 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது. தோனியை தவிர மற்ற எல்லா பேட்ஸ்மேன்களுமே சொற்ப ரன்களில் விக்கெட்டை தூக்கிக் கொடுத்து அவுட் ஆகியிருந்தனர்.
பவர்ப்ளேயில் மட்டும் 32 ரன்களை எடுத்து சென்னை அணி 5 விக்கெட்டுகளை விட்டிருந்தது. அங்கேயே சென்னையின் தோல்வி உறுதியாகிவிட்டது. பதினொன்றே காலுக்கு தெரிய வேண்டிய ரிசல்ட் எட்டே காலுக்கே தெரிந்துவிட்டது.
மும்பை அணி இந்த சீசனில் அவ்வளவு சிறப்பாக பந்துவீசியிருக்கவில்லை. பவர்ப்ளேயில் இதுவரை 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கின்றனர். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள். இந்த போட்டிக்கு முன்புவரை மும்பை அணியின் சிறந்த பந்துவீச்சு பெர்ஃபார்மென்ஸ் அதுதான்.
மூன்று போட்டிகளில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளே எடுக்காமல் கூட இருந்திருக்கின்றனர். ஆனால், சென்னைக்கு எதிராக நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பாக வீசியிருந்தனர். பவர்ப்ளேயில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். டேனியல் சாம்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
Also Read: IPL2022 : பொறுப்பை ஏற்கும் ஹீரோக்கள்; துணிச்சலான அணுகுமுறை; குஜராத் டைட்டன்ஸின் சக்சஸ் சீக்ரெட்!
கான்வே அவுட் ஆன விதம் சர்ச்சை ஆனது. பவர் சப்ளை பிரச்சனை காரணமாக ரிவியூவே எடுக்க முடியாமல் அவர் அவுட் ஆகியிருந்தார். அவரின் விக்கெட் மட்டும்தானே சென்னைக்கு பிரச்சனை? மற்ற வீரர்கள் சோபித்திருக்கலாமே? கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியை கான்வேயை நம்பி மட்டும்தான் இறங்கினீர்களா? கான்வேயும் ருத்துராஜூம் அடித்தால் மட்டும்தான் போட்டியை வெல்வீர்களா? அவர்களால் மட்டும்தான் சென்னை அணியை வெல்ல வைக்க முடியுமெனில் மற்ற வீரர்கள் எதற்கு? போன்ற கேள்விகள் எழவே செய்கிறது.
ஹிரித்திக்கை தவிர மும்பை அணியின் சார்பில் பந்துவீசிய அத்தனை பேருமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள். சென்னையின் பேட்ஸ்மேன்கள் க்ரீஸூக்குள் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவரை கூட முழுமையாக ஆட முடியவில்லை. 16 ஓவரிலேயே ஆல் அவுட். மும்பை அணி எக்ஸ்ட்ராக்களாக மட்டுமே 15 ரன்களை கொடுத்திருந்தது. இதை கழித்துவிட்டு பார்த்தால் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள்.
வேடிக்கை என்னவெனில் சென்னை அணியில் தோனியை தவிர வேறு யாருமே இந்த எக்ஸ்ட்ராக்களை விட அதிகமாக ஸ்கோர் செய்யவில்லை. எல்லாருமே 15 ரன்களுக்கும் குறைவாகவே ஸ்கோர் செய்திருந்தனர். கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் இப்படி ஆடும் ஒரு அணி ப்ளே ஆஃப்ஸூக்கு எந்தவிதத்திலும் தகுதி கிடையாது. அடுத்த சீசனிலாவது நன்றாக ஆடுங்கள். அதற்கான படிப்பினைகளை இங்கே இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்