Sports
சென்னைக்கு மாபெரும் சவாலை அளிக்கப்போகும் மும்பை - பரபர பந்தயத்தில் வெல்லப்போவது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மும்பை அணியை விட சென்னை அணிக்கு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், மும்பை அணி ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையும் உறுதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், சென்னை அணி 9 வது இடத்தில் இருந்தாலும் அந்த அணிக்கு இன்னமும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு உயிர்ப்புடனே இருக்கிறது. அதற்கு மீதமிருக்கும் 3 போட்டிகளையும் சென்னை வென்றாக வேண்டும். முதல் போட்டி இன்றைக்கு மும்பைக்கு எதிராக!
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அதிலும் இந்த போட்டியில் சென்னை அணி தங்களின் இருப்பிற்காக போராட போவதால் போட்டி இன்னும் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும்.
சென்னை அணி கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை மிகச்சிறப்பாக வென்றிருந்தது. சென்னை அணியின் சார்பில் ஓப்பனர்களான டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். மும்பைக்கு எதிரான இந்த போட்டியை சென்னை வெல்ல வேண்டுமாயினும் இவர்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும். டெவான் கான்வே கடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார். கான்வே + ருத்துராஜ் கூட்டணி கடந்த 3 போட்டிகளில் இரண்டு முறை சதத்தை கடந்துள்ளது. இந்தளவுக்கான உயர்தரமான பெர்ஃபார்மென்ஸை இன்றும் கொடுத்து இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். அது நிகழ்ந்துவிட்டாலே சென்னை அணியின் வெற்றி பாதி உறுதியாகிவிடும். மொயீன் அலி, சிவம் துபே, அம்பத்தி ராயுடு, ப்ராவோ, தோனி போன்றோர் நடு மற்றும் பின் வரிசையில் அதிரடியான கணிசமான பங்களிப்பை கொடுத்தாக வேண்டும். மொத்தத்தில் கடந்த போட்டியை போல பேட்டிங் ஆடியாக வேண்டும்.
சென்னை அணியின் பௌலிங்கை பொறுத்தவரைக்கும் ஸ்பின்னர்களான மஹீஸ் தீக்சனாவும் மொயீன் அலியும் கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். அத்தனையும் முக்கியமான விக்கெட்டுகள். இந்த போட்டியிலும் இருவரும் இதே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பந்துவீசியாக வேண்டும். முதலில் தடுமாறிக் கொண்டிருந்த முகேஷ் சௌத்ரி இப்போது நன்றாக வீச ஆரம்பித்திருக்கிறார். இவர்களோடு ப்ராவோவும் சேர்ந்து டைட்டாக வீசினால் சென்னை பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மும்பை அணியை பொறுத்தவரைக்கும் கடந்த போட்டியில் 160+ ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது. பேட்டிங்கில் எந்த வீரரிடமும் ஒரு சீரான தன்மை இல்லவே இல்லை. இன்னமும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட ரோஹித் சர்மா திணறிக்கொண்டேதான் இருக்கிறார். இஷன் கிஷன் சீராக பெர்ஃபார்ம் செய்வதே இல்லை. பொல்லார்ட் பொல்லார்டாகவே இல்லை. இவர்கள் இந்த போட்டியில் கொஞ்சம் கூடுதல் பொறுப்போடு ஆடினால் மட்டும்தான் வெல்ல முடியும். பொல்லார்ட் எப்போதும் சென்னைக்கு எதிராக பட்டையை கிளப்புவார். இந்த சீசனில் முதல் போட்டியில் அவர் பெரிதாக அடிக்கவில்லை. இன்று அவரின் பிறந்த நாள் வேறு என்பதால் பிறந்தநாள் ஸ்பெசல் இன்னிங்ஸ் ஆடி ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்ககின்றனர்.
பௌலிங்கை பொறுத்தவரைக்கும் விக்கெட் எடுக்காமல் திணறிக்கொண்டிருந்த சீனியர் பும்ரா கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டியில் வெறித்தனமாக வீசி தனது முதல் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். பும்ராவை எந்த இடத்தில் ரோகித் பயன்படுத்தப்போகிறார் என்பது முக்கியமான அம்சமாக இருக்கும். ஏனெனில், வழக்கம்போல டெத் ஓவரில் பும்ராவை பிரதானமாக பயன்படுத்தினால் சென்னையின் டாப் ஆர்டர் தப்பித்துவிடும். இதனால் பும்ராவுக்கு பவர்ப்ளேயில் கூடுதலாக ஒரு ஓவர் கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சென்னையின் டாப் ஆர்டர் பும்ராவை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும். பும்ராவுக்கு மற்ற பௌலர்களும் ஒத்துழைக்கும்பட்சத்தில் சென்னையை கட்டுப்படுத்த முடியும்.
இந்த போட்டியின் வெற்றி தோல்வி மும்பையை ஒன்றுமே செய்யாது. ஆனால், சென்னை தோற்றால் 100% தொடரைவிட்டு வெளியேறிவிடும். ஆக, இந்த போட்டியில் அழுத்தமெல்லாம் சென்னைக்குத்த்தான். சென்னை இந்த சவாலை சமாளித்து வெற்றிகரமாக மீளுமா?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?