Sports

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா சென்னை அணி ?.. இன்று CSK vs MI போட்டி!

போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

இடம்: வான்கடே, மும்பை

நேருக்கு நேர்: 35

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: 15

மும்பை இந்தியன்ஸ் வெற்றி: 20

முடிவு இல்லை: 0

சிறந்த பேட்டர்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் - 11 போட்டிகளில் 306 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ்: திலக் வர்மா - 11 போட்டிகளில் 334 ரன்கள்

சிறந்த பௌலர்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ - 9 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்

மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்ப்ரித் பும்ரா - 11 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை:

இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 7 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை வான்கடேவில் 2 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, இரண்டிலுமே தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் ஐந்தாவது இடம் வரை கூட முன்னேற முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய 11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

முதல் முறையாக இந்த சீசனில் தான் அந்த அணி 9 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. வெறும் 4 புள்ளிகள் மட்டுமே எடுத்திருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் வான்கடே மைதானத்தில் அந்த அணி ஒரு போட்டியில்தான் விளையாடியிருக்கிறது. அதிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தினாலும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் இருக்கும்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் வெற்றி பெற்று அசத்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் இருவருமே டக் அவுட் ஆகியிருந்தாலும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அந்த அணியைக் காப்பற்றியது. திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். சென்னை தரப்பில் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 7 விக்கெட்டுகளை இழந்து கடைசி பந்தில் இலக்கை சேஸ் செய்தது. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜெய்தேவ் உனத்கட் பந்துவீச்சில் தோனி 22 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். சிஎஸ்கே சார்பில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 40 ரன்கள் எடுத்தார். மும்பை பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

கடைசிப் போட்டியில்:

தங்கள் கடைசிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. ஓப்பனர் டெவான் கான்வே சிறப்பாக விளையாடி 87 ரன்கள் விளாசினார். கெய்க்வாட் - கான்வே தொடக்க ஜோடி 11 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 117 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். மொயீன் அலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங், டுவைன் பிராவோ ஆகியோர் தலா2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியோ தங்கள் கடைசி போட்டியில் கொல்கத்தா நைட்ரிடர்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அற்புதமாகப் பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதில் ஒரு மெய்டனும் கூட. அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், அந்த அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இஷன் கிஷன் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

மாற்றங்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும் ராபின் உத்தப்பாவுக்குப் பதில் இளம் வீரர்கள் யாரேனும் இடம்பெறலாம். ஜடேஜா காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக சொல்லப்படுவதால், அனுபவம் கருதி உத்தப்பாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரைலி மெரிடித்துக்குப் பதில் பசில் தம்பி விளையாடலாம். ரமன்தீப் சிங் இடத்தில் டிவால்ட் பிரெவிஸ் களமிறக்கப்படலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் தூபே, எம்எஸ்தோனி (C) (WK), டுவைன் பிராவோ, சிமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி, மஹிஷ் தீக்‌ஷனா

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா (C), இஷன் கிஷன் (WK), டிவால்ட் பிரெவிஸ் திலக் வர்மா, கரண் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேய சிங், பசில் தம்பி, ஜஸ்ப்ரித் பும்ரா.

Also Read: சென்னைக்கு மாபெரும் சவாலை அளிக்கப்போகும் மும்பை - பரபர பந்தயத்தில் வெல்லப்போவது யார்?