Sports
குஜராத்தை அதிரவிட்ட உம்ரான் மாலிக்.. அபிஷேக் சர்மா : அதிர்ச்சியளிக்கும் தோல்வியை தழுவிய ‘சன்ரைசர்ஸ்’ !
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றிருக்கிறது. அசாத்தியமான முறையில் குஜராத் அணி வென்றிருந்தாலும் சன்ரைசர்ஸ் அணியின் இரண்டு இளம் வீரர்களே இந்த போட்டியில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தனர்.
சன்ரைசர்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இதுவரை அந்த அணி ஆடியிருந்த அத்தனை போட்டியிலுமே கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸை வென்று சேஸிங்கையே தேர்வு செய்திருக்கிறார். இந்த போட்டியில்தான் முதன் முதலாக கேன் வில்லியம்சன் டாஸை தோற்றார். டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சேசிங்கை தேர்வு செய்தார். இதனால், முதல் முதலாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணிக்கு பேட்டிங்கை விட பந்துவீச்சுதான் அதிகபலம் வாய்ந்தது. அத்தகைய பந்துவீச்சை வைத்தே தொடர்ந்து 5 போட்டிகளில் வெல்லவும் செய்தது. இப்போது முதலில் பேட்டிங் என்பதால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு மிகப்பெரிய டார்கெட்டை செட் செய்ய வேண்டிய நெருக்கடி சன்ரைசர்ஸுக்கு ஏற்பட்டது. ஆனால், இந்த டாஸ்க்கை சன்ரைசர்ஸ் வெற்றிகரமாக செய்து முடித்தது. 20 ஓவர்களில் 195 ரன்களை எடுத்தது.
சன்ரைசர்ஸ் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ஓப்பனர் அபிஷேக் சர்மாவே. வில்லியம்சனுடன் ஓப்பனிங் இறங்கிய அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 154.76 ஆக இருந்தது. இந்த அரைசதத்தை விட ஹைலைட்டான விஷயம் என்னவெனில் அபிஷேக் சர்மா ரஷீத் கானை அட்டாக் செய்த விதம்தான். ரஷீத்கான் டி20 போட்டிகளில் அபாயகரமான ஸ்பின்னர். தனது வேகமான கூக்ளிக்கள் மூலம் விக்கெட் வேட்டை நடத்தக்கூடியவர்.
இதனாலயே பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவரின் பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். அவரின் நான்கு ஓவர்களை பார்த்து ஆடிவிட்டு மற்ற பௌலர்களையே அட்டாக் செய்ய விரும்புவர். இதனாலயே அவரின் எக்கானமி ரேட் ரொம்பவே குறைவாக இருக்கும். இந்த சீசனிலேயே 6 ஐ சுற்றித்தான் எக்கானமி வைத்திருக்கிறார்.
ஆனால், நேற்று அபிஷேக் சர்மா ஈவு இரக்கமின்றி ரஷீத்கானின் ஓவர்களில் முரட்டுத்தனமாக அட்டாக் செய்திருந்தார். ரஷீத்கானுக்கு எதிராக 15 பந்துகளை சந்தித்திருந்த அபிஷேக் சர்மா 34 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 225 க்கும் அதிகம். ரஷீத்கானை சமீபமாக யாரும் இந்த அடி அடிக்கவே இல்லை. ரஷீத்கான் மற்றவர்களுக்கு வீசிய 9 பந்துகளில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அபிஷேக் சர்மா நாலாபுறமும் ரஷீத்கானின் கூக்ளிக்களை சிதறடித்தார்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா கவனம் ஈர்த்த நிலையில், பௌலிங்கில் உம்ரான் மாலிக் கவனம் ஈர்த்தார். 4 ஓவர்களை வீசி 25 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த ஐந்துமே முக்கியமான விக்கெட்டுகளை. போட்டியை குஜராத் பக்கமிருந்து சன்ரைசர்ஸ் பக்கமாக திருப்பிய விக்கெட்டுகள். 8 வது ஓவரில் உம்ரான் மாலிக் முதல் ஸ்பெல்லை வீச வந்தபோது குஜராத் அணி 68-0 என்ற வலுவான நிலையில் டார்கெட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் பந்தை வாங்கிய உம்ரான் மாலிக் புயலுக்கு நிகரான தன்னுடைய வேகத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திக்கொடுத்தார். முதல் ஓவரில் சுப்மன் கில்லை போல்டாக்கியவர், அதே ஓவரில் ஹர்திக்கிற்கு ஒரு வெறித்தனமான ஷார்ட் பாலை வீசி அவரின் ஈகோவை சுரண்டி அடுத்த ஓவரிலேயே இன்னொரு ஷார்ட் பாலில் அதற்கென பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த ஃபீல்ட் செட்டப்பில் ஹர்திக்கை வீழ்த்தினார்.
அடுத்தடுத்து அரைசதம் கடந்திருந்த சஹாவுக்கு 153 கி.மீ வேகத்தில் ஒரு யார்க்கரை வீசி போல்டை தெறிக்க வைத்தார். கடைசியாக வீசிய நான்காவது ஓவரில் அபாயகரமான மில்லர் மற்றும் அபினவ் மனோகரையும் போல்டாக்கி தனது முதல் 5 விக்கெட் ஹாலை எடுத்தார். குஜராத் அணியின் முதல் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக்தான் வீழ்த்தியிருந்தார். ஒற்றை ஆளாக சன்ரைசர்ஸ் பக்கம் போட்டியை திருப்பிக் கொடுத்தார்.
இந்த சீசனில் ஒரு பௌலரின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான். கடைசிக்கட்டத்தில் டெத் ஓவர்களில் சொதப்பி சன்ரைசர்ஸ் தோற்றதால் உம்ரானின் பந்துவீச்சிற்கான முழு பலனும் கிடைக்கவில்லை. ஆனாலும், மேட்ச்சில் தோற்ற பிறகும் மேன் ஆஃப் தி மேட்ச் உம்ரான் மாலிக்கிற்குதான் வழங்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!