Sports
தொடர் டக் அவுட்கள்.. சொதப்பல் ஃபார்ம்: மீண்டு வருவாரா விராட் கோலி?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று நடக்கவிருக்கிறது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸுக்கு எதிராக மிக மோசமாக தோற்றிருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புமா எனும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், அதைவிட அதிகமாக விராட் கோலி என்ன செய்யப்போகிறார் எனும் எதிர்பார்ப்பே எகிறியுள்ளது. காரணம், விராட் கோலியின் தற்போதைய சொதப்பலான ஃபார்ம்.
சதமடிக்காமல் தொடர்ந்து சுமாராக ஆடி வந்த விராட் கோலியின் சொதப்பலான ஃபார்ம் இந்த ஐ.பி.எல் தொடரிலும் தொடர்கிறது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே விராட் கோலி டக் அவுட் ஆகியிருக்கிறார். அதுவும் கோல்டன் டக் அவுட். க்ரீஸுக்குள் வந்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். லக்னோவிற்கு எதிராக சமீராவின் பந்திலும் சன்ரைசர்ஸுக்கு எதிராக மார்கோ யான்சனின் பந்திலும் டக் அவுட் ஆகியிருக்கிறார். அபாயகரமான பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதற்கு இப்போதெல்லாம் பௌலர்கள் பெரிதாக சிரமப்படுவதே இல்லை. போகிற போக்கில் அசால்ட்டாக அவரின் விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார்கள்.
இந்த இரண்டு போட்டிகள் என்று மட்டுமில்லை. இந்த சீசன் முழுவதுமே விராட் கோலி சொதப்பல்தான். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியிருக்கும் கோலி 119 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 120 ஐ சுற்றித்தான் இருக்கிறது. பஞ்சாபுக்கு எதிரான முதல் போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்களையும், மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் 36 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்திருந்தார். இந்த இரண்டு இன்னிங்ஸ்கள் மட்டும்தான் ஓரளவுக்கு டீசண்ட்டான இன்னிங்ஸ்களாக அமைந்திருந்தன. மற்ற எல்லா போட்டிகளிலுமே ரன் எடுப்பதற்கு கடுமையாக திணறியிருந்தார்.
கடந்த இரண்டு சீசன்களாகவே விராட் கோலியின் ஐ.பி.எல் ஆட்டம் கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது. 2019 சீசனில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 141. அதேநேரத்தில் 2020 சீசனில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 121 மட்டும்தான். கடந்த சீசனில் அது இன்னும் குறைந்து 119 ஆக மாறியது. ஆக, கடந்த இரண்டு சீசன்களாகவே அவரின் சர்வதேச போட்டிகளை போன்றே ஐ.பி.எல் ஆட்டமும் பெரிதாக வேகமே எடுக்கவில்லை.
'விராட் கோலி கொஞ்ச காலம் ஓய்வு எடுக்க வேண்டும். அவரிடம் இன்னும் 6-7 ஆண்டுக்கான கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. ஓய்வு எடுக்காமல் ஆடி அதை அவர் கெடுத்துக் கொள்ள கூடாது' என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார்.
'விராட் கோலிக்கு அவர் நினைக்கும் விஷயங்கள் சரியாக அமையவில்லை. நாங்கள் அவரை முழுமையாக நம்புகிறோம். சீக்கிரமே அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரக்கூடும்' என பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்திருக்கிறார். இதே நம்பிக்கையில்தான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். மைக் ஹெசன் சொல்லும் அந்த பெரிய இன்னிங்ஸ் கோலியிடமிருந்து இன்று வெளிப்படுமா?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?